ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

தளர்ச்சியின்றி
ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்,
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்,
திறம்காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்,
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘நல்ல வழியிலிருந்து யாரும் மாறாதபடி நான் உலகைக் காக்கின்றேன்’ என்கிறாள், ‘தளர்ச்சியின்றி கோவர்த்தனகிரி என்கிற மலையை நான் எடுத்தேன்’ என்கிறாள், ‘அசுரர்களைத் தவறாமல் கொன்றேன்’ என்கிறாள், ‘திறனைக் காட்டி அன்று ஐந்து பாண்டவர்களைக் காத்தேன்’ என்கிறாள், ‘எந்த ஆபத்தும் இல்லாதபடி கடலைக் கடைந்தேன்’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பக்தர்களுக்கு அருள்புரிவதில் என்றும் சலிப்படையாத கடல்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இவளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற உறுதியுடன் இருக்கிற உலகத்து மக்களே, மீட்க இயலாதபடி என் திருமகள் அடைந்திருக்கிற இந்த நிலையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 6

இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்,
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்,
இன ஆயர் தலைவனும் யானே என்னும்,
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல்கண் நல்லீர்க்கு இவை என்சொல்லுகேன்?
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனகிரியைத் தூக்கியது நானே’ என்கிறாள், ‘கூட்டமான எருதுகளை (நப்பின்னைக்காக) அடக்கியதும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்கன்றுகளை மேய்த்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்களைக் காத்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான ஆயர்களின் தலைவனும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தேவர் கூட்டத்தின் தலைவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, வேல்களைப்போன்ற கண்களையுடைய நல்லவர்களே, வேல்களைப்போன்ற கண்களையுடைய என் மகள் அனுபவிக்கும் இந்த விஷயங்களைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com