ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்,
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்,
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை’ என்கிறாள், ‘இங்கே எல்லாரும் என் உறவினர்கள்’ என்கிறாள், ‘உறவினர்களை உண்டாக்குவது நானே’ என்கிறாள், ‘உறவினர்களை அழிப்பதும் நானே’ என்கிறாள், ‘உறவினர்களுடன் பொருந்தியவன் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தனக்கு உறவினர் என யாரும் இல்லாத மாயனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, பேதைப்பருவமுள்ள என்னுடைய மகள் உள்ளூரக் கண்டு சொல்கிறவற்றையெல்லாம், இங்கே வந்திருக்கிற உங்களுக்கு நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 8

உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும்,
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண்கொடிக்கே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘தெய்வமாக உரைக்கப்படுகிற முக்கண்பிரான் (சிவபெருமான்) நானே’ என்கிறாள், ‘பிரம்மனும் நானே’ என்கிறாள், ‘அமரர்கள் அனைவரும் நானே’ என்கிறாள், ‘அமரர்களின் தலைவனான இந்திரன் நானே’ என்கிறாள், ‘முனிவர்களும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படுகிற முகில்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, ‘இவளுக்கு என்ன ஆனது? சொல்வாய்’ என்று நீங்கள் கேட்கிறீர்கள், என்னுடைய அழகிய, ஒளி நிறைந்த கொடி போன்ற மகள் இப்படியெல்லாம் பேசுவதைப்பற்றி நான் எப்படிச் சொல்வேன்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com