எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

அசுரரை அழித்தான்
எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4


பாடல் 3

புகழும் இவள் நின்று இராப்பகல்
பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது
ஒப்பச் செழும் கதிர் ஆழிமுதல்
புகழும் பொருபடை ஏந்திப்
போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணிநெடுமாடம்
நீடு திருப்புலியூர் வளமே.

அலைகள் மோதுகின்ற கடலொன்றில் தீப்பற்றிக்கொண்டு, அது எங்கும் தீக்கதிர்கள் விளங்கச் செல்லுவதைப்போன்ற செழுமையான கதிரைக்கொண்ட சக்ராயுதத்தில் தொடங்கி, பெருமைக்குரிய பல ஆயுதங்களை ஏந்திப் போருக்குச் சென்றான், அசுரரை அழித்தான், அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், திகழும் அழகிய, நீண்ட மாடங்கள் நிறைந்த திருப்புலியூரின் வளத்தை இவள் இரவும் பகலும் விடாமல் போற்றுகிறாள்.

பாடல் 4

ஊர் வளம் கிளர் சோலையும்
கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக்
குட்டநாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர், மூ உலகு
உண்டு, உமிழ் தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்து அன்றிப்
பேச்சு இலள் இன்று இப் புனை இழையே.

ஊரின் வளத்தைச் சொல்லும் சோலைகளும் கரும்பும் சிறந்த செந்நெல்லும் சூழ்ந்திருக்கிற, அழகிய, வளம் நிறைந்த, குளிர்ந்த வயல்வெளிகளைக்கொண்ட குட்டநாட்டுத் திருப்புலியூரிலே, அனைத்துச் சிறப்புகளுடன் எழுந்தருளியிருக்கும் பெருமான், மூன்று உலகங்களையும் உண்டு, உமிழ்ந்த தேவபிரான், அவருடைய திருப்பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும்தான் பேசுகிறாள் அணிகலன்களை அணிந்த இந்தப் பெண், வேறு எதையும் பேசுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com