எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

உலகங்களை ஆளும்
எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் 5

புனை இழைகள் அணிவும் ஆடை
உடையும் புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு
இது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடம் தாமரை
மலரும் தண் திருப்புலியூர்
முனைவன் மூ உலகு ஆளி
அப்பன் திரு அருள் மூழ்கினளே.

இவள் ஆபரணங்களைப் பூணுகின்ற அழகையும், இவளுடைய ஆடைகளின் அழகையும், உருவத்திலே தெரியும் புதிய அழகையும் சிந்தித்துப்பார்த்தால், இவையெல்லாம் ஒருவர் நினைத்துப் பெறக்கூடிய அழகுகளா? (இல்லை. இறைவன் அருளால்மட்டுமே பெறக்கூடியவை.) சுனையிலே பெரிய தாமரை மலருகின்ற குளிர்ந்த திருப்புலியூரின் தலைவன், மூன்று உலகங்களை ஆளும் அப்பன், அவருடைய திருவருளில் இவள் மூழ்கிவிட்டாள்.

பாடல் 6

திரு அருள் மூழ்கி வைகலும்
செழுநீர் நிறக் கண்ணபிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம்
திருந்த உள,
திரு அருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
மெல்லியல் செவ் இதழே.

கடல்வண்ணனான கண்ணனின் திருவருளிலே இவள் எப்போதும் மூழ்கியிருந்திருக்கிறாள், இவள் அவனுடைய திருவருளைப் பெற்றமைக்கான அடையாளங்கள் திருத்தமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பக்தர்களுக்குத் தன்னுடைய திருவருளை வழங்குவதற்காக அவன் சென்றுசேர்கின்ற குளிர்ந்த திருப்புலியூரில் அவனுடைய அருளாலே வளரும் பாக்குமரத்தின் அழகிய பழத்தைப்போல, இந்த மென்மையான பெண்ணின் சிவந்த இதழ் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com