எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

மலர்த் திருவடிகளின்
எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2


பாடல் 1

நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
அவனைக் கருத, வஞ்சித்துத்
தடுமாற்று அற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதுர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே கூடும் இது அல்லால்
விடும் ஆறு என்பது என்? அந்தோ,
வியன் மூ உலகு பெறினுமே?

நெடுமாலுக்கு அடிமை செய்வேன் என்று மனத்தால் அவனை நினைத்தேன், உடனடியாக, என்னை வஞ்சித்த தீவினைகள் எல்லாம் நிச்சயமாகவும் முழுமையாகவும் நீங்கின, இந்தத் தன்மையை நினைத்தால், கொடிய, பெரிய வினையைச் செய்த நான் அவனுடைய அடியவர்களின் திருவடிகளையே சென்று கூடுவேன், பரந்து விரிந்த மூன்று உலகங்களையும் பெற்றாலும் அந்தத் திருப்பணியை விடுவேனா? அடடா. (விடமாட்டேன்.)


பாடல் 2

வியன் மூ உலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் புனை பூங்கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே?

மழை மேகம்போன்ற திருமேனிகொண்ட அம்மானுடைய பூக்கள் தூவப்பட்ட, வீரக்கழல் அணிந்த மலர்த் திருவடிகளின்கீழ் தானே அடிமையாகி நிற்கிறவர்களுடைய திருவடிகளை வணங்கினேன், இந்த உலகத்திலேயே இன்பத்தைப் பெற்றேன். பாவியாகிய நான் பெற்ற இந்தச் சுகத்துக்கு ஈடு ஏது? பரந்து விரிந்த மூன்று உலகங்களைப் பெற்றாலும், தன்னைத்தானே அனுபவிக்கிற கைவல்ய அனுபவம் கிடைத்தாலும், அந்தச் சுகங்களெல்லாம்கூட இதற்கு ஈடாகுமா? (ஆகாது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com