எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பவளம்போன்ற வாய்
எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் 3

உறுமோ பாவியேனுக்கு இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
செந்தாமரைக் கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் இங்கே திரியவே.

இந்த உலகங்கள் மூன்றும் உடனே நிறையும்படி தன்னுடைய சிறிய, சிறந்த மேனியை நிமிர்த்திய என்னுடைய செந்தாமரைக்கண்ணன், திருக்குறளன், வாமனனின் நறுமணம் நிறைந்த புதுமலர்த் திருவடிகளின்கீழ் புகுகின்ற பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? அவனுடைய அடியவர்கள் சிறிய, சிறந்த மனிதர்களாக இந்த உலகில் இருக்கிறார்களே, அவர்களுக்கு அடிமை செய்வதல்லவோ என்னுடைய திருப்பணி? அதைக் கடந்து பெருமானுக்கு அடிமை செய்தல் இந்தப் பாவியேனுக்குப் பொருந்துமா? (பொருந்தாது. அடியவர் பணியே முதன்மையானது.)


பாடல் 4


இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்?
இரு மா நிலம் முன் உண்டு, உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய்,
புலன்கொள் வடிவு என் மனத்ததாய்,
அங்கு ஏய் மலர்கள் கையவாய்
வழிபட்டு ஓட அருளிலே.

பெரிய, சிறந்த பூமியை முன்பு உண்டு, உமிழ்ந்த பெருமான், சிறந்த, அழகிய பவளம்போன்ற வாய், செந்தாமரைபோன்ற கண்களைக்கொண்ட என் அம்மான், அவருடைய பொங்கி எழும் புகழைப்பற்றிய சொற்கள் என் வாயிலே இருக்க, புலன்களைக் கொள்ளைகொள்ளும் அவருடைய திருவுருவம் என் மனத்திலே இருக்க, அப்பெருமானுக்கு ஏற்ற மலர்கள் என் கையிலே இருக்க, அவரை வழிபட்டுப் பெரியோர் காட்டிய பாதையில் நடப்பேன்; அந்த அருள் எனக்குக் கிடைத்தால், இந்தப் பூமியில் திரிவது ஓர் இழுக்கு ஆகுமா? (ஆகாது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com