எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

அழகிய சக்ராயுதத்தைக்
எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் 5

வழிபட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்ச்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே?

எம்பெருமானை வழிபட்டு அந்த வழியிலே நடப்பதற்கான அருளை நான் பெறலாம், மாயனாகிய அப்பெருமானின் அழகிய மலர்த் திருவடிகளின்கீழ் சுழித்துக்கொண்டு ஓடுகிற ஒளிமயமான சோதி வெள்ளத்திலே இன்புற்று இருக்கலாம், இத்தகைய அனுபவங்கள் எனக்குக் கிடைத்தாலும்கூட, இழிவான மனித உடலோடு பிறந்து, எம்பெருமானின் சிறப்புகளைக் கற்றுக்கொண்டு, அவற்றைக் கவி அமுதமாக வெளிப்படுத்தி, அப்பாடல்களை அடியவர்களோடு சேர்ந்து பாடி மகிழும் இன்பத்துக்கு அது இணையாகுமா? (ஆகாது.)


பாடல் 6

நுகர்ச்சி உறுமோ மூ உலகின்
வீடு பேறு, தன் கேழ் இல்
புகர்ச் செம்முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக் கை என் அம்மான்,
நிகர்ச் செம்பங்கி, எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே.

ஒப்பற்ற, சிறந்த முகத்திலே புள்ளிகளைக்கொண்ட யானையாகிய குவலயாபீடத்தை வீழ்த்தியவன், அழகிய சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய என் அம்மான், தங்களுக்கு ஏற்ற சிவந்த (செம்பட்டை) மயிர், நெருப்பைப்போன்ற விழிகளைக்கொண்ட அசுரர்களையெல்லாம் அழிக்கிறவன், எங்கும் விரைந்து திரிகிற கருடனை வாகனமாகக் கொண்டவன், அவனுடைய பெரிய, ஒப்பற்ற, சிறந்த புகழைப் பாடும் சுகத்துக்கு, மூன்று உலகங்களைப் படைத்து, அழிக்கிற இறைமைத்தன்மையும் ஒப்பாகுமா? (ஆகாது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com