எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

ஆயுதங்களை ஏந்தியவர்

பாடல் 9

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி,
அமர் கொள் ஆழி, சங்கு, வாள்,
வில், தண்டு ஆதி பல் படையன்,
குமரன், கோல ஐங்கணை வேள்
தாதை கோது இல் அடியார்தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியற்கே.

தன் அடியவர்களுடைய கூட்டத்தின் வலிய வினைகளையெல்லாம் நாசம் செய்யவல்ல திறனையுடைய மூர்த்தி, போரிடவல்ல சக்ராயுதம், சங்கு, வாள், வில், தண்டு போன்ற பல ஆயுதங்களை ஏந்தியவர், அழகிய இளைஞர், அழகான ஐந்து அம்புகளைக் கொண்ட மன்மதனின் தந்தை, அவருடைய குற்றமற்ற அடியவர்களுடைய அடியவர்களுக்கு அடியவர்களுக்கு அடியவனாகும் பாக்கியம் திக்கற்றவனான எனக்கு வாய்க்கட்டும்.

பாடல் 10

வாய்க்க தமியேற்கு ஊழிதோறு
ஊழி ஊழி மா காயாம்-
பூக்கொள் மேனி, நான்கு தோள்,
பொன் ஆழிக்கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே.

சிறந்த காயாம்பூவைப்போன்ற திருமேனி, நான்கு திருத்தோள்கள், அழகிய சக்ராயுதத்தை ஏந்திய திருக்கையைக்கொண்டவர் எம்பெருமான். அவரை நீங்காமல் எப்போதும் திருத்தொண்டு செய்கிறவர்கள் அடியார்கள். அந்த அடியார்களுடைய அடியார்களுடைய அடியார்களுடைய அடியார்கள்தாம் எங்கள் தலைவர்கள். அவர்களுக்குக் குடிகளாகத் தொண்டுசெய்து வாழும் கொள்கை, திக்கற்றவனான எனக்குப் பல ஊழிக்காலம் வாய்க்கட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com