ஒன்பதாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

வளமான குணங்களே
ஒன்பதாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

பொருள் கை உண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர்,
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் ‘என்னே’ என்பாரும் இல்லை,
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே.

ஒருவர் கையில் பொருளோடு இருப்பதைப் பார்த்தால், உலகத்தவர்கள் அவரைப் போற்றுவார்கள், ஏற்றுக்கொண்டு அவரோடு இருப்பார்கள். ஒருவேளை அவர் அறிவின்மையையும் துன்பத்தையும் தரக்கூடிய வறுமையில் இருந்தால், ‘அடடா’ என்று அவருக்காக இரக்கப்படக்கூட யாரும் வரமாட்டார்கள். பயப்படுத்தும் செயல்களைக்கொண்ட அசுரர்கள் மங்கி அழியும்படி வடமதுரையிலே பிறந்தவர் எம்பெருமான், அவருடைய அருளைப் பெறுகிற அடியவர்களானால் நாம் உய்யலாம், வேறு பாதுகாப்பு நமக்கில்லை.


பாடல் - 4

அரணம் ஆவர் அற்றகாலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே
வருணித்து என்னே, வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே
சரண் என்று உய்யப்போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே
.

செல்வம் உள்ள ஒருவர், தனக்குப் பாதுகாப்பாகச் சிலரைச் சேர்த்துக்கொள்கிறார், ‘என்றைக்காவது தனக்கு வறுமை வந்தால், இவர்கள் தனக்கு உதவுவார்கள்’ என்று நம்புகிறார். ஆனால் உண்மையில், அவர் அப்படியொரு வறுமை நிலைக்குச் சென்றுவிட்டால், இவர்கள் யாரும் அவருக்கு உதவமாட்டார்கள், கடனைத் திரும்பப்பெற்றுக்கொண்ட அற்பர்களைப்போல் அங்கிருந்து சென்றுவிடுவார்கள், இவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதும் ஒன்றுதான், கொடுக்காமல் இருப்பதும் ஒன்றுதான். இவர்களைப்பற்றிப் பேசி என்ன பயன்? வடமதுரையிலே பிறந்த எம்பெருமானின் வளமான குணங்களே சரண் என்று எண்ணி உய்யவேண்டும், வேறு பெருமை நமக்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com