ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

வலிய வினைதானோ?
ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4


பாடல் - 3

வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன்
                                                   வல்வினைகொல்?
கோலம் திரள் பவளக்கொழும் துண்டம்கொலோ,
                                                  அறியேன்,
நீல நெடுமுகில்போல் திருமேனி அம்மான்
                                                 தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என்
                                                 இன் உயிர்க்கே.

நீல நிறத்தில் நீண்டு திகழும் முகிலைப்போன்ற திருமேனியைக்கொண்ட எம்பெருமானின் கொவ்வைக்கனி போன்ற திரு அதரம், தூய்மையான, சிறந்த பழம்தானோ? தீவினைகளைச் செய்தவளாகிய என்னுடைய வலிய வினைதானோ? அழகு திரண்ட பவளத்தின் கொழுமையான துண்டுதானோ? நான் அறியேன். திரும்பும் திசைகளிலெல்லாம் அந்தப் பெருமானின் திரு அதரமே வந்து தோன்றுகிறது, என் இனிய உயிரைக் கொள்ளைகொள்கிறது.

***

பாடல் - 4

இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும்
                                இணை நீல வில்கொல்?
மன்னிய சீர் மதனன் கருப்புச்சிலைகொல்?
                                மதனன்
தன் உயிர்த் தாதை கண்ணப்பெருமான்
                               புருவம் அவையே,
என் உயிர் மேலனவாய் அடுகின்றன
                              என்றும் நின்றே.

மன்மதனுக்கு உயிர்போன்ற தந்தையாகிய கண்ணபெருமானின் திருப்புருவங்கள், பெண்களின் இனிய உயிர்களைக் கவர்வதற்காக வளைகின்ற இரண்டு நீல விற்களோ? நிலைபெற்ற புகழையுடைய மன்மதனின் கரும்பு வில்லோ? எம்பெருமானின் அந்தத் திருப்புருவங்கள் என்னுடைய உயிருக்குமேல் எப்பொழுதும் நிலைபெற்று நின்று, வருத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com