ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

தாங்கமுடியாமல் அழிவார்கள்
ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர்
                                வெண் மின்னுக்கொல்,
அன்றி, என் ஆவி அடு மணி முத்தம்கொலோ,
                                அறியேன்,
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்,
ஒன்றும் அறிகின்றிலேன், அன்னைமீர், எனக்கு
                                 உய்வு இடமே.

அன்னைமார்களே, கோவர்த்தன மலையை எடுத்த எம்பெருமானின் புன்னகையானது, என்றைக்கும் நிலைத்து நிற்கிற, சிவந்த சுடரை வெளிப்படுத்துகிற வெண்மையான மின்னல்தானோ? அல்லது, என்னுடைய உயிரை வருத்தும் அழகிய முத்துகளோ? நான் அறியேன். அப்பெருமானின் புன்னகை, என்னுடைய உயிரை வருத்துகிறது. நான் உய்வதற்கான இடத்தை
அறியாதவளாக இருக்கிறேன்.

***

பாடல் - 6

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும்
                                      அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும்
                                     தளிர்கொல்,
பை, விடப் பாம்பு அணையான் திருக்குண்டலக்
                                     காதுகளே,
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன,
                                    காண்மின்களே.

படமெடுக்கின்ற, நஞ்சையுடைய பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமானின் திருக்குண்டலம் அணிந்த திருக்காதுகள், மீன் வடிவில் தழைத்த தளிர்களோ? பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் உய்விடமே இல்லாதபடி அவை துன்புறுத்துகின்றனவே! (அசுரர்கள், அரக்கர்கள் எம்பெருமானின் அழகைக் கண்டு தாங்கமுடியாமல் அழிவார்கள், பெண்களோ அந்த அழகைப் பெறமுடியாமல் ஏங்கி அழிவார்கள். ஆகவே, இவர்கள் மூவருமே உய்வதற்கு வழியில்லை.) பாருங்கள், அந்தக் காதுகள் சிறிதும் இடைவெளியின்றி (என்னைப்போன்ற பெண்களை) வருத்திக்கொண்டே இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com