ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 1, 2

திருவுருவமாகியும் நிற்கிறாய்
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 1, 2


பாடல் - 1

மாயா, வாமனனே, மதுசூதா, நீ அருளாய்,
தீயாய், நீராய், நிலனாய், விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய், மக்களாய், மற்றுமாய்,
                                                                                 முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு, இவை என்ன நியாயங்களே.

மாயனே, வாமனனே, மதுசூதனனே, தீயாக, நீராக, நிலமாக, வானாக, காற்றாக, தாயாக, தந்தையாக, மக்களாக, மற்ற உறவினர்களாக, இன்னும் மீதமுள்ள அனைத்துமாக நிற்கிறவன் நீ, அதேசமயம், உன்னுடைய திருவுருவமாகியும் நிற்கிறாய், இவையெல்லாம் என்ன தன்மைகளோ! எங்களுக்கு அருள்புரிவாய்.

***

பாடல் - 2

அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே,
                                                                    அருளாய்,
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல்சுடராய்,
                                                                   இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப்
                                                                   பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமுமாம், இவை என்ன
                                                                   விசித்திரமே.

அழகிய, தேனோடு கூடிய மலர் நிறைந்த, குளிர்ந்த திருத்துழாயைத் திருமுடியிலே சூடிய அச்சுதனே, சந்திரனாக, சூரியனாக, செழுமையான பல சுடர்களாக, இருளாக, பொங்கிப் பொழிகிற மழையாக, புகழாக, பழியாகத் திகழ்கிற நீ, அதன்பின்னே கொடுமையையுடைய வெம்மையான எமனாகவும் இருக்கிறாய், இவையெல்லாம் என்ன விசித்திரமோ! எங்களுக்கு அருள்புரிவாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com