ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 3, 4

பொருட்களும் நீயே
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 3, 4


பாடல் - 3

சித்திரத் தேர் வலவா, திருச்சக்கரத்தாய்,
                                                     அருளாய்,
எத்தனை ஓர் உகமும் அவையாய்,
                                                    அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய்,
                                                   வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ, இவை என்ன விடமங்களே.

அழகிய தேரை நடத்தியவனே, திருச்சக்கரத்தைக் கையில் கொண்டவனே, எம்பெருமானே, எத்தனையோ யுகங்கள், அவை அனைத்துமாக நீதான் நிற்கிறாய், அவற்றுள் அமைந்த ஒரேமாதிரியான, மாறுபட்ட பல அழகிய பொருட்களும் நீயே, அழியக்கூடிய பொருட்களாகவும், அழியாத பொருட்களாகவும் நீயே நிற்கிறாய், வியப்பூட்டும்வகையில் செயல்படுகிற வித்தகனே, இந்த வேறுபாடான செயல்களை நீ எப்படிச் செய்கிறாயோ. எங்களுக்கு அருள்புரிவாய்.

***

பாடல் - 4

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே,
                                   எனக்கு ஒன்று அருளாய்,
உள்ளதும் இல்லதுமாய், உலப்பு இல்லனவாய்,
                                   வியவாய்
வெள்ளத் தடம் கடலுள் விட நாக அணைமேல்
                                    மருவி
உள்ளப் பல் யோகு செய்தி, இவை என்ன
                                    உபாயங்களே.

தேனோடு மலரும் தாமரையைப்போன்ற கண்களைக்கொண்ட கண்ணனே, உள்ளவை, இல்லாதவை, அழியாதவை, அழிபவை என அனைத்தையும் நீயே நிர்வகிக்கிறாய், வெள்ளம் நிறைந்த பெரிய பாற்கடலினுள்ளே விஷத்தைக்கொண்ட பாம்பைப் படுக்கையாகக் கொண்டு திருத்துயில் கொண்டபடி சிந்தித்து எங்களைக் காக்கிறாய், இது எப்படி? எனக்குச் சொல்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com