ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 5, 6

மாயங்களைச் செய்கிறாய்
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 5, 6


பாடல் - 5

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக்
                                            கொண்டிட்டு நீ,
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே,
                                            அருளாய்,
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய்ப்
                                           பின்னும் நீ
மாயங்கள் செய்துவைத்தி, இவை என்ன
                                           மயக்குகளே.

நறுமணம் நிறைந்த மலர்களைக்கொண்ட, குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலே அணிந்த மாயவனே, என்னுடைய பாசங்களை நீக்கி, உனக்கே அடிமையாகும்படி செய்திருக்கிறாய், உடல், உயிர், பிறப்பு, இறப்பு என்கிற அனைத்தும் நீ படைத்தவை, ஆனால் அதற்குமேலும் நீ பல மாயங்களைச் செய்கிறாய், இவை என்ன மயக்கங்களோ. எங்களுக்கு அருள்புரிவாய்.

***

பாடல் - 6

மயக்கா, வாமனனே, மதிஆம் வண்ணம்
                                             ஒன்று அருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமுமாய், அழலாய்க்
                                            குளிராய், வியவாய்,
வியப்பாய், வென்றிகளாய், வினையாய்ப்
                                            பயனாய்ப் பின்னும் நீ
துயக்கா நீ நின்றவாறு, இவை என்ன
                                           துயரங்களே.

மயக்குபவனே, வாமனனே, மறதியும் நீ, தெளிவும் நீ, நெருப்பும் நீ, குளிரும் நீ, வியப்பும் நீ, வியக்கத்தக்க பொருள்களும் நீ, வெற்றியும் நீ, வினைகளும் நீ, அவற்றின் பயனும் நீ, அதன்பிறகும் உன்னை அடைந்த அடியவர்களுக்கு மயக்கத்தை/குழப்பத்தை உண்டாக்குகிறாயே, இதென்ன வேதனை. பெருமானே, எங்களுக்கு நல்ல அறிவைக்கொடுத்து அருள்புரிவாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com