ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 7, 8

துயரங்களை உண்டாக்குகின்ற
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -பாடல் 7, 8


பாடல் - 7

துயரங்கள் செய்யும் கண்ணா, சுடர்
                                 நீள்முடியாய், அருளாய்,
துயரம்செய் மானங்களாய், மதன் ஆகி,
                                உகவைகளாய்த்
துயரம்செய் காமங்களாய்த் துலையாய்,
                                நிலையாய், நடையாய்த்
துயரங்கள் செய்துவைத்தி, இவை என்ன
                               கண்டாயங்களே.

துயரங்களை உண்டாக்குகின்ற கண்ணனே, சுடர்வீசும் நீண்ட திருமுடியைக்கொண்டவனே, எங்களுக்குத் துயரங்களைத் தருகிற ஆசைகளாக, செருக்காக, களிப்பாக, காமங்களாக இருப்பவன் நீ, இவற்றால் நாங்கள் செய்கிற செயல்களின் விளைவாகவும் நீ இருக்கிறாய், நிலைபெற்ற பொருள்கள் நீ, அசையும் பொருள்களும் நீ, இப்படிப் பலவிதங்களில் எங்களுக்குத் துயரங்களைச் செய்துவைத்திருக்கிறாய், இவை என்ன விளையாட்டுகளோ, எங்களுக்கு அருள்புரிவாய்.

***

பாடல் - 8

என்ன கண்டாயங்களால் நின்றிட்டாய்,
                                  என்னை ஆளும் கண்ணா,
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை
                                 யாவர்க்கும் தேற்ற அரியை,
முன்னிய மூ உலகும் அவையாய் அவற்றைப்
                                 படைத்தும்
பின்னும் உள்ளாய், புறத்தாய், இவை என்ன
                                 இயற்கைகளே.

என்னை ஆளும் கண்ணனே, நீதான் எப்படிப்பட்ட விளையாட்டுகளை உடையவன்! நீ இந்தத் தன்மையைக்கொண்டவன் என்று உன்னை யாராலும் தெளிந்துகொள்ள இயலாது, அந்த அளவுக்கு அரிய குணங்களோடு இருக்கிறாய், பழைமையான மூன்று உலகங்களும் நீயே, அவற்றைப் படைத்தவனும் நீயே, அந்த உலகங்களிலே இருக்கும் பொருட்களின் உள்ளேயும் நீதான் இருக்கிறாய், வெளியேயும் இருக்கிறாய், இவைதான் உன் இயல்புகளோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com