ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

உய்யச்செய்த பெருமான்
ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2


பாடல் - 1

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய்
நின்றான் சோதியை என்சொல்லி நிற்பனோ?

என்றென்றைக்கும் என்னை உய்யச்செய்த பெருமான், அன்றைக்கு என்னைத் தானாக ஆக்கி, என்னை வைத்துத் தன்னைத்தானே இனிய தமிழில் பாடிக்கொண்ட ஈசன், அனைத்துக்கும் தொடக்கமாக நிற்கும் சோதிவடிவானவன், அத்தகைய எம்பெருமானை நான் என்ன சொல்லிப் பாடுவேன்!

***

பாடல் - 2

என்சொல்லி நிற்பன்? என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன்சொல்லும் மூ உருவாம் முதல்வனே.

எம்பெருமானை என்னுடைய சொற்களால் நான் பாடுவதாக எல்லாரும் எண்ணுகிறார்கள். ஆனால், உண்மையில் இவை அனைத்தும் அவனே தன் சொல்லால் தன்னைப் புகழ்ந்துகொண்டவைதான். அவன் என்முன்னே வந்து சொன்னான், அதை நான் திருப்பிச் சொன்னேன், அவ்வளவுதான். அப்படித் தானே பாடிய பாடல்களை என்மூலம் இனிய கவிதைகளாக வரச்செய்து என்னுடைய இனிய உயிரைப் பொருட்படுத்தத்தக்க ஒன்றாக ஆக்கினான் அந்த மாயன், மும்மூர்த்திகளாகவும் திகழும் அந்த முதல்வனை நான் என்ன சொல்லிப் பாடுவேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com