ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

தெளிவு ஏற்படும்படி
ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4


பாடல் - 3

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நாமுதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ.

எம்பெருமான், தன்மீது எனக்குத் தெளிவு ஏற்படும்படி, ‘ஆம், முதல்வன் இவனே’ என்று விளக்கினான், என்னுடைய நாவில் வந்து புகுந்தான், நல்ல இனிய கவிகளைச் சொன்னான், அவற்றின்மூலம் தூய்மையான பக்தர்கள் தன்னை அறியும்படி தானே விளக்கினான், நான் பேசக் காரணமாகத் திகழும் அந்த அப்பனை நான் மறப்பேனா? (மாட்டேன்.)

***

பாடல் - 4

அப்பனை என்று மறப்பன்? என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவிதான் சொல்லி
ஒப்பு இல்லாத் தீவினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே.

எம்பெருமான் நானாக மாறி, தவறில்லாதமுறையில் தன்னைத் தானே கவி பாடிக்கொண்டான், யாரோடும் ஒப்பிட இயலாத அளவுக்குத் தீவினைகளைச் செய்த என்னையும் அவன் உய்யச்செய்தான், என்னைத் திருத்தி வாழச்செய்தான், அந்தச் சிறப்பை உணர்ந்தபிறகு, நம் அப்பனை நான் மறப்பேனா? (மாட்டேன்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com