ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

என்னைத் தன்னாக்கினான்
ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8


பாடல் - 7

வைகுந்தநாதன், என் வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன், தன்னை என் ஆக்கி, என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ வண் தீம்கவி
செய் குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?

வைகுண்டத்திலே எழுந்தருளியிருப்பவன், என்னுடைய வலிய வினைகளெல்லாம் கெடும்படி செய்கின்ற தூயவன், என்னோடு கலந்து, என்மூலமாகத் தன்னை வைகுந்தநாதனாகப் புகழும் வளமையான, இனிய கவிதைகளை செய்கிற குந்தன்/முகுந்தன், அவனைச் சிந்தித்துத் திருப்தி பிறப்பது எப்போது? (எப்போதுமில்லை. எம்பெருமானை எவ்வளவுதான் சிந்தித்தாலும், இன்னும் இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டும் என்றுதான் மனம் விழைகிறது.)

***

பாடல் - 8

ஆர்வனோ ஆழி அம் கை எம்பிரான் புகழ்
பார், விண், நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே.

எம்பெருமானின் புகழைச் சொல்லும் தகுதி எனக்கில்லை, ஆனால் அப்பெருமானோ என்னைத் தன்னாக்கினான், என்னாலே தன்னைச் சிறப்போடு இனிய கவிகளாகப் பாடிக்கொண்டான், அழகிய திருக்கைகளிலே சக்ராயுதத்தை ஏந்திய அத்தகைய எம்பெருமானின் புகழை நிலத்திலுள்ளோர், விண்ணிலுள்ளோர், நீரிலுள்ளோர் எல்லாரும் ஒன்றாகச் சொல்லி, அதைக் கேட்டாலும் எனக்குத் திருப்தி ஏற்படுமா? (ஏற்படாது. அவன் புகழைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com