எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

நீயாக இருக்கிறாய்
எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

யானும் நீதானே ஆவதோ மெய்யே, அரு நரகு
                               அவையும் நீயானால்
வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை நரகமே
                              எய்தில் என்? எனினும்
யானும் நீதானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன்
                             நரகம் நான் அடைதல்,
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய், அருளு
                            நின் தாள்களை எனக்கே.

எம்பெருமானே, எல்லாமே நீயாக இருக்கிறாய், ஆகவே, நானும் நீதான், இது உண்மை. அரிய நரகமும் நீதான், அப்படியானால், உயர்ந்த இன்பமாகிய பரமபதத்தை அடைந்தால் என்ன, நரகத்தையே அடைந்தால்தான் என்ன? (இரண்டும் நீயே.) என்றாலும், நான் உன்னுடைய அடியவன் என்பதைத் தெளிவாக உணரும்போதெல்லாம், இந்த உலக வாழ்க்கை என்கிற நரகத்தை எண்ணி மிகவும் அஞ்சுவேன், உயர்ந்த பரமபதத்திலே வீற்றிருப்பவனே, உன்னுடைய திருவடிகளை எனக்கு அருளுவாய்.

***

பாடல் - 10

தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
                       தந்த பேர் உதவி கைம்மாறா
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை
                      செய்தனன், சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய்,
                     துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்,
தாள்கள் ஆயிரத்தாய், பேர்கள் ஆயிரத்தாய்,
                     தமியனேன் பெரிய அப்பனே.

சோதிவடிவான எம்பெருமானே, பலப்பல திருத்தோள்கள், பலப்பல திருமுடிகள், பலப்பல மலர்க்கண்கள், பலப்பல திருவடிகள், பலப்பல பெயர்களைக் கொண்ட பெருமானே, தனிமையில் இருக்கும் என்னுடைய பெரிய அப்பனே, மென்மேலும் பெருமை வருமாறு உன்னுடைய திருவடிகளை எனக்கே தந்தாய், இந்தப் பெரிய உதவிக்குக் கைம்மாறாக உன்னுடைய தோள்களை நன்கு தழுவிக்கொண்டு, என் உயிரை உனக்கே தந்துவிட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com