ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

திருக்கண்களை எண்ணி
ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்,
கண்ண நீர் கைகளால் இறைக்கும்,
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்,
‘தாமரைக்கண்’ என்றே தளரும்,
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு’ என்னும்,
இருநிலம் கைதுழா இருக்கும்,
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்,
இவள்திறத்து என் செய்கின்றாயே?

(தாய் சொல்கிறார்) என் மகள் இரவும் பகலும் உறங்குவதில்லை, கண்ணீரைக் கைகளால் இறைக்கிறாள் (அந்த அளவுக்கு அழுகிறாள்), ‘சங்கு சக்கரங்கள்’ என்று உன்னுடைய திருச்சின்னங்களைச் சொல்லிக் கை கூப்புகிறாள், ‘தாமரைபோன்ற திருக்கண்கள்’ என்று உன்னுடைய திருக்கண்களை எண்ணித் தளர்கிறாள், ‘உன்னைவிட்டு நான் எவ்வாறு இருப்பேன்?’ என்கிறாள், பெரிய நிலத்தைக் கையால் துழாவுகிறாள், கயல்மீன்கள் பாய்கிற நீரைக்கொண்ட திருவரங்கத்துப் பெருமானே, இவளை என்னசெய்யப்போகிறாயோ!

***

பாடல் - 2

‘என்செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா’
என்னும், கண்ணீர் மல்க இருக்கும்,
‘என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்’
என்னும், வெவ் உயிர்த்து உயிர்த்து உருகும்,
‘முன்செய்த வினையே முகப்படாய்’ என்னும்,
‘முகில்வண்ணா, தகுவதோ’ என்னும்,
முன் செய்து இவ் உலகம் உண்டு, உமிழ்ந்து, அளந்தாய்,
என்கொலோ முடிகின்றது இவட்கே?

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘என்னுடைய தாமரைக்கண்ணா, என்னை என்னசெய்ய நினைக்கிறாய்?’ என்கிறாள், கண்களில் நீர் மல்க நிற்கிறாள், ‘அலைகள் வீசுகிற திருவரங்கத்துப் பெருமானே, நான் என்ன செய்வேன்?’ என்கிறாள், வெம்மையாகப் பெருமூச்சு விட்டுப் பெருமூச்சு விட்டு உருகுகிறாள், ‘முன்பு நான் செய்த பாவமே, இங்கே வந்து நான் பார்க்கும்படி நில்’ என்கிறாள், (அந்தப் பாவத்தால்தான் எம்பெருமானின் அருள் தனக்குக் கிடைக்கவில்லையோ என்று கருதுகிறாள்), ‘முகில்வண்ணா, நீ செய்வது தகுமா?’ என்கிறாள், முன்பு இவ்வுலகத்தைச் செய்து, உண்டு, உமிழ்ந்து, அளந்த பெருமானே, இந்தப் பெண்ணின் நிலை என்னாகுமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com