ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

மயங்கச்செய்தவனே
ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

சிந்திக்கும், திசைக்கும், தேறும், கை கூப்பும்,
‘திருவரங்கத்து உள்ளாய்’ என்னும்,
வந்திக்கும், ஆங்கே மழைக்கண் நீர் மல்க,
‘வந்திடாய்’ என்று என்றே மயங்கும்,
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே,
அலைகடல் கடைந்த ஆர் அமுதே,
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே.

(தாய் சொல்கிறார்) அந்திவேளையிலே இரணியனின் உடலைப் பிளந்தவனே, அலைகடலைக் கடைந்த ஆரமுதே, உன்னைச் சந்தித்து உன்னுடைய திருவடிகளை அடையவேண்டும் என்று உறுதியாக எண்ணிய இந்தப் பெண்ணை மயங்கச்செய்தவனே, இவள் உன்னை எண்ணுகிறாள், மயங்குகிறாள், தெளிகிறாள், கை கூப்புகிறாள், ‘திருவரங்கத்தில் உள்ளவனே’ என்கிறாள், தலைவணங்குகிறாள், கண்களில் மழைபோல் நீர் பெருகும்படி ‘வந்துவிடு’ என்று மயங்குகிறாள்.

***

பாடல் - 6

‘மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே’
என்னும், ‘மாமாயனே’ என்னும்,
‘செய்யவாய் மணியே’ என்னும், ‘தண் புனல் சூழ்
திருவரங்கத்து உள்ளாய்’ என்னும்,
‘வெய்ய வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில்
ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்,
பை கொள் பாம்பு அணையாய், இவள் திறத்து அருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.

(தாய் சொல்கிறார்) என் மகள் ‘மயக்கி என் மனத்தைக் கவர்ந்தவனே’ என்கிறாள், ‘சிறந்த மாயங்களைப் புரிபவனே’ என்கிறாள், ‘சிவந்தவாய் மணியே’ என்கிறாள், ‘குளிர்ந்த நீரால் சூழப்பட்ட திருவரங்கத்துப் பெருமானே’ என்கிறாள், ‘வெம்மையான வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில் ஏந்துகின்றவனே, விண்ணோர்களுக்கு முதலானவனே’ என்கிறாள், படமெடுக்கும் பாம்பைப் படுக்கையாகக் கொண்டவனே, பாவியாகிய நான், இவள் விஷயத்தில் செய்யக்கூடியது ஏதேனும் இருந்தால் சொல்லி அருள்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com