ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பூமியை இடந்தெடுத்தான்
ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல்-  3

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே, பின்னும்
நான்றில ஏழ்மலை தானத்தவே, பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே, அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.

எம்பெருமான், நம் அப்பன் வராக அவதாரமெடுத்து, பூமியைக் குத்தி இடந்து தன்னுடைய கொம்பிலே கொண்ட நாளிலே, ஏழு தீவுகளும் நழுவவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு மலைகளும் சலிக்கவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு கடல்களும் உடைந்து ஓடவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன. இப்படி அற்புதமானமுறையில் பூமியை இடந்தெடுத்தான் பெருமான்.

***

பாடல் -4

நாளும் எழ, நிலம், நீரும் எழ, விண்ணும்
கோளும் எழ, எரி, காலும் எழ, மலை
தாளும் எழ, சுடர் தானும் எழ, அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.

எம்பெருமான், நம் அப்பன் உலகை உணவாக உண்டபோது, பெரும் ஆரவாரம் எழுந்தது, நாள் வேறுபாடு அற்றுப்போனது, நிலம், நீர் என்கிற வேறுபாடு மறைந்தது, வானம், கோள்கள், நெருப்பு, காற்று ஆகியவை மறைந்தன, மலைகள் வேரோடு விழுந்தன, சுடர்கள் அடங்கின. இப்படி அற்புதமானமுறையில் உலகை உண்டான் பெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com