ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

மனிதர்கள் அனுபவிக்கும்
ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2


பாடல் - 1

கற்பார் இராமபிரானைஅல்லால் மற்றும் கற்பரோ?
புல்பா முதலாம் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.

நான்முகனான பிரம்மன் படைத்த திருநகரம், அயோத்தி என்னும் நன்மை பொருந்திய நகர். அங்கே வாழும் புற்களில் தொடங்கி அனைத்து அசையாப் பொருட்களும், சாதாரண எறும்பில் தொடங்கி அனைத்து அசையும் பொருட்களும் நல்ல தன்மையோடு இருக்கும், இதற்காக அவை தனியே எந்த முயற்சியும் எடுக்கவில்லை, ஆனாலும், அவற்றுக்கு அந்த நல்ல தன்மை கிடைக்கும்படி அருளினான் எம்பெருமான். ஆகவே, நன்மைக்கான வழியைக் கற்க விரும்புகிறவர்கள் அந்த ராமபிரானையல்லாமல் வேறு விஷயங்களைக் கற்பார்களோ? (மாட்டார்கள். அவனைமட்டும் கற்றாலே போதும், நன்மை வரும்.)

***

பாடல் - 2

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ?
நாட்டில் பிறந்து, படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச்செய்து நடந்தமை கேட்டுமே.

எம்பெருமான் மனிதர்களுக்காக இங்கே வந்து பிறந்தான், மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்கூட அனுபவித்தான், உலகை வாட்டும் அரக்கர்களை நாடிச்சென்று கொன்றான், உலகைக் காத்து உய்யச்செய்தான், நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று காண்பிப்பதற்காக, அவனே நல்வழியில் நடந்துகாட்டினான். அத்தகைய ராமனின் தன்மைகளைக் கேட்ட உலக மக்கள் நாராயணனான அவனுக்கன்றி வேறு யாருக்கேனும் அடிமையாவார்களா? (மாட்டார்கள். ராமனுக்கே ஆளாவார்கள்.)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com