ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

அவனுக்கு ஆட்படாமலிருப்பார்களா?
ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால் மற்றும் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேண்பால் பழம்பகை வல் சிசுபாலன் திருவடி
தான்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே.

கேட்பவர்களுடைய காதுகளைச் சுடும் கீழ்மையான வசவுகளாலே கண்ணனை வைதான் சிசுபாலன், காரணம், அவனுக்கு அவர்மீது முன்பே இருந்த பழைய பகைதான். அப்படி எம்பெருமானை வைதவனான வலிய சிசுபாலனும்கூட, எம்பெருமானின் அருளைப் பெற்றான், அவருடைய திருவடிகளைச் சென்றடையும் பாக்கியம் பெற்றான். இந்தப் பேருண்மையை, பெருமானின் கருணையை அறிந்தவர்களை அறிந்தவர்கள், அந்தக் கேசவனின் கீர்த்தியைத்தவிர வேறு எதையேனும் கேட்பார்களா? (மாட்டார்கள். அவன் புகழைமட்டுமே கேட்பார்கள்.)

***

பாடல் - 4

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதும்இல் பாழ் நெடும் காலத்து
நன்மைப் புனல் பண்ணி, நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.

பழங்காலத்தில், எங்கும் பலவிதமாகப் படர்ந்திருந்த பொருட்கள் யாவும் இல்லாமல் பாழாகின, அப்போது, எம்பெருமான் நன்மை தரும் புனலை உருவாக்கினான், நான்முகனை உருவாக்கினான், முன்பு தனக்குள்ளே உட்கொண்ட பொருட்களையெல்லாம் மீண்டும் தோற்றுவித்தான். இந்தச் சூழல்களைச் சிந்தித்து அப்பெருமானின் தன்மையை அறிந்தவர்கள் அவனுக்கு ஆட்படாமலிருப்பார்களா? (மாட்டார்கள். நிச்சயம் அவனுக்கே ஆட்படுவார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com