ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

மார்பிலே கொண்டவனை
ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8


பாடல் - 7

என் திருமார்பன்தன்னை, என் மலைமகள்
                                                  கூறன்தன்னை,
என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட
                                                 நான்முகனை,
நின்ற சசிபதியை, நிலம் கீண்டு எயில்
                                                 மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியைக்
                                                 காணேனோ?

எம்பெருமானை, திருமகளை மார்பிலே கொண்டவனை, மலைமகளான பார்வதியைத் தன் உடலில் ஒரு பாதியாகக் கொண்ட சிவனாக இருப்பவனை, கலைமகளான சரஸ்வதியை என்றும் தன்னிடத்தே கொண்ட பிரம்மனாக இருப்பவனை, இந்திராணியின் கணவனான இந்திரனாக இருப்பவனை, நிலத்தைக் கோட்டாலே குத்திக் கீண்டவனை, மூன்று மதில்களைக்கொண்ட முப்புரங்களை எரித்தவனை, ஐம்புலன்களையும் வென்ற சுவர்க்க லோகத்தை ஆள்பவனைக் காணமாட்டேனா.

***

பாடல் - 8

ஆளியைக் காண் பரியாய், அரி காண்
                                           நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து
                                          பிலம் புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக்
                                         கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும்
                                        காண்டும்கொலோ?

எம்பெருமான் போர்செய்ய வந்தபோது, அரக்கர்கள் யாளியைக் கண்ட குதிரையைப்போல நடுங்கினார்கள், சிங்கத்தைக் கண்ட நரியைப்போல ஊளையிட்டார்கள், இலங்கையைக் கடந்து ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டார்கள், உடனே, எம்பெருமான் வலிமைமிக்க கருடன்மீதேறிச் சென்றான், வலிமை நிறைந்த மாலியையும் பிற அரக்கர்களையும் கொன்றான், மலைபோன்ற பிணக்குவியல்களை உருவாக்கினான், அத்தகைய எம்பெருமானை நான் காணக்கூடுமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com