ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பெண்களுடைய ஆவியை
ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2


பாடல் - 1

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ, அறியேன்,
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ, அறியேன்,
சூழவும் தாமரை நாள்மலர்போல் வந்து தோன்றும் கண்டீர்,
தோழியர்காள், அன்னையீர், என்செய்கேன், துயராட்டியேனே.

தோழியரே, தாய்மார்களே, என்னைச் சுற்றிலும் அன்று மலர்ந்த தாமரையைப்போல வந்து தோன்றுகின்றவை, சக்கரப்படையைக் கையில் ஏந்திய அழகிய கண்ணபிரானின் திருக்கண்களா? அல்லது, பெண்களுடைய ஆவியை உண்ணும் இரண்டு எமன்களா? தெரியவில்லையே. எம்பெருமான் என்னை இப்படித் துயரப்படுத்தினால் நான் என்ன செய்வேன்?

***

பாடல் - 2

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர், என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ, கொழுந்தோ, அறியேன்,
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு, எனது ஆவியுள்ளே
மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.

தாய்மார்களே, என்னை நீங்கள் வருத்தியும், தூற்றியும் நலிவதால் என்ன பயன்? (ஏதுமில்லை.) திரட்டிய வெண்ணெயை உண்ட கண்ணபிரானின் திருமூக்கு, பக்கத்திலே உயர்ந்த கற்பகக்கொடியோ? கொழுந்தோ? நான் அறியேன். அந்தத் திருமூக்கு என்னுடைய ஆவியினுள்ளே ஏற்றிய வலிமையான விளக்கின் சுடராக நிற்கும் பெருமையைக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com