எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

வண்மையுடைய மாயக்கூத்தன்
எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
நான் இளைக்கின்றிலன், கண்டுகொண்மின்,
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்,
நல் நுதலீர், இனி நாணித்தான் என்?
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த
நீண்ட முகில்வண்ணன், கண்ணன் கொண்ட
கோல வளையோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச்சென்றே.

நல்ல நெற்றியைக் கொண்ட தோழிகளே, என்னுடைய நிலைமையை இந்த உலகமே அறிந்துவிட்டது, அத்தனை பேரின் பழியையும் நான் சுமக்கிறேன், இனி வெட்கப்பட்டு என்ன பயன்?

நீல மலர் போன்ற பெருமான், நெடும் சோதியால் சூழப்பட்ட நீண்ட முகில்வண்ணன், கண்ணன், எம்பெருமான் என்னுடைய அழகிய வளையல்களை, மாந்தளிர் நிறத்தைக் கவர்ந்துகொண்டான், அப்பெருமானைக் காணாமல் நான் திரும்பமாட்டேன், அதற்கு எத்தனை நாளானாலும் பரவாயில்லை, காலமே முடிந்தாலும் நான் சலிக்கமாட்டேன், அவனைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருப்பேன், இதை அறிந்துகொள்ளுங்கள்.

பாடல் - 4

கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை, நெஞ்சம் தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன்,
மாடக்கொடி, மதிள் தென்குளந்தை
வண் குடபால் நின்ற மாயக்கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவனை ஆதரித்தே.

மாடங்கள், கொடிகள், மதிள் சுவரைக் கொண்ட திருக்குளந்தையிலே மேற்குத்திசையில் நிற்கின்ற வண்மையுடைய மாயக்கூத்தன், வெற்றி பெறும் பறவையாகிய கருடனைக் கொடியிலே உயர்த்தியவன், வெல்லுகின்ற போரைச் செய்கிறவன், வலக்கையில் சக்ராயுதத்தை ஏந்தியவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை ஆதரித்து அவனை விரும்பிச் சென்றேன், என்னுடைய அழகிய வளையல், நெஞ்சம் தொடங்கி அனைத்தும் நீங்கிச்சென்றன, பல வளையல்களைக்கொண்ட இந்தப் பெண்கள்முன்னே நெடுங்காலமாக என்னுடைய இயல்பை இழந்தேன், இனி நான் எதைக் கொடுப்பேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com