எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

இப்படிப்பட்டவரா? அப்படிப்பட்டவரா?
எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள், நம் உடையமேதான்?
சொல்லுவதோ இங்கு அரியதுதான்,
ஊழிதோறு ஊழி ஒருவன் ஆக
நன்கு உணர்வார்க்கும் உணரல் ஆகா
சூழல் உடைய சுடர்கொள் ஆதித்
தொல்லை அம் சோதி நினைக்கும்காலே.

தோழிகளே, ஆராய்ந்துபார்த்தால், எல்லாவற்றையும் நன்கு உணரக்கூடியவர்கள்கூட பல ஊழிக்காலம் முயன்றாலும் எம்பெருமான் இத்தன்மையானவர் என்று அறிய இயலாது, அப்படிப்பட்ட தனித்துவமானவர் அவர், சுடர்வடிவானவர், அனைத்துக்கும் முதலானவர், பழைமையான அழகிய சோதிவடிவானவர், சக்ராயுதத்தை வலக்கையில் ஏந்தியவர், அத்தகைய எம்பெருமானை நாம் விரும்பி வணங்குவதும், அவர் நம்மிடையே வருவதும் நம் கையிலா இருக்கிறது? (அவர்தானே விரும்பி நமக்கு அருளவேண்டும்?) நாம் இதைப்பற்றிப் பேசுவது பொருத்தமற்றது.

பாடல் - 6

தொல்லை அம் சோதி நினைக்கும்கால் என்
சொல் அளவு அன்று, இமையோர்தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்,
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ் குடந்தை
மாமலர்க் கண்வளர்கின்ற மாலே.

வல்லிக்கொடிகள் நிறைந்த வளமான வயல்களால் சூழப்பட்ட திருக்குடந்தையிலே, சிறந்த, மலர்போன்ற கண்கள் வளரும்படி திருத்துயில் கொள்கின்ற திருமால், பழைமையான அழகிய சோதிவடிவான எம்பெருமானை நினைக்கும்போது, அவரை வர்ணிக்க என்னுடைய சொற்கள் போதாது.

விண்ணோரால்கூட எம்பெருமானின் தன்மையை உணர இயலாது. ‘இவர் இப்படிப்பட்டவரா? அப்படிப்பட்டவரா?’ என்று எல்லையில்லாத ஐயங்களில் அவர்கள் தடுமாறுவார்கள், அத்தகைய எம்பெருமான், என்னுடைய மாந்தளிர் நிறத்தைப் பறித்துக்கொண்டார், தான் அணிந்துள்ள குளிர்ந்த, மலர்ந்த திருத்துழாய் மாலையையும் எனக்குத் தரவில்லை, இதை நாம் யாரிடம் சென்று முறையிடுவது? சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com