எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

கோவிந்தா வைகுந்தா
எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

மால், அரி, கேசவன், நாரணன், சீ
மாதவன், கோவிந்தன், வைகுந்தன் என்று என்று
ஓலம் இட என்னைப் பண்ணிவிட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்,
ஏலம் மலர்க்குழல் அன்னைமீர்காள்,
என்னுடைத் தோழியர்காள், என்செய்கேன்,
காலம் பல சென்றும் காண்பது ஆணை,
உங்களோடு எங்கள் இடை இல்லையே.

மாலே, அரியே, கேசவா, நாரணா, ஶ்ரீமாதவா, கோவிந்தா, வைகுந்தா என்றெல்லாம் ஓலமிடும்படி என்னைச் செய்துவிட்டான் எம்பெருமான், ஆனால் எப்படிக் கெஞ்சினாலும் தன்னுடைய உருவையோ சுவடையோ காட்ட மறுக்கிறான், நறுமணம் பொருந்திய மலர்களைக் கூந்தலில் அணிந்த என் தாய்மார்களே, என் தோழியரே, நான் என்ன செய்வேன்?

எத்தனை நாளானாலும் சரி, நான் அப்பெருமானைக் காண்பேன், இது ஆணை. இதை நீங்கள் ஏற்க மறுத்தால், உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பாடல் - 8

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்,
பூவைகாள், குயில்காள், மயில்காள்,
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
அஞ்சன வெற்பும் அவை நணிய,
கடை அறப் பாசங்கள் விட்டபின்னை
அன்றி அவன் அவை காண்கொடானே.

நான் வளர்த்த கிளிகளே, நாகணவாய்ப்பறவைகளே, குயில்களே, மயில்களே,

நமக்குரிய மாந்தளிர் வண்ணத்தையும், சங்கு வளையல்களையும், நெஞ்சையும் எம்பெருமான் முழுவதுமாகக் கவர்ந்துகொண்டான், அப்பெருமான் சென்று சேர்கிற ஶ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல், திருவேங்கடமலை ஆகியவை அருகில்தான் இருக்கின்றன, ஆனால், நம்முடைய பாசங்கள் அனைத்தும் முழுவதுமாக அறுபட்டால்தான் நம்மால் அவற்றைக் காண இயலும்.

ஆகவே, உங்களுக்கும் எனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com