எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

மண்ணும் விண்ணும்
எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

காண் கொடுப்பான் அலன் ஆர்க்கும் தன்னை,
கைசெயற்பாலது ஓர் மாயம்தன்னால்
மாண் குறள் கோலம் வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவிபிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன், இனி என் கொடுக்கேன்,
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்.

என்னுடைய தோழிகளே, நல்ல நெற்றியை உடைய பெண்களே, எம்பெருமான் எப்பேர்ப்பட்ட ஞானமுள்ளவர்களுக்கும் தன்னுடைய தன்மையை உள்ளபடி காட்டிவிடமாட்டான், அத்தகைய பெருமான், யாராலும் கையால் செய்ய இயலாத மாயம் ஒன்றைச் செய்து வாமனனாக வந்தான், தன்னுடைய அழகிய வடிவை உலகுக்குக் காட்டினான், பின்னர், மண்ணும் விண்ணும் நிறையும்படி பெரிய வடிவம் எடுத்தான், ஒளி நிறைந்த அவனுடைய திருத்தோள்கள் ஓங்கி வளர்ந்து தழைத்தன, திருமகள் கணவனான அந்தப் பெருமானுக்கு நான் என்னுடைய நிறைவு என்கிற குணத்தையும் நாணத்தையும் கொடுத்துவிட்டேன். இனி நான் வேறென்ன தரமுடியும்?

பாடல் - 10

என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்,
யான் இனிச் செய்வது என்? என் நெஞ்சு என்னை
‘நின்னிடையேன் அலேன்’ என்று நீங்கி
நேமியும் சங்கும் இரு கைக்கொண்டு
பல் நெடும் சூழ்சுடர் ஞாயிற்றோடு
பால்மதி ஏந்தி ஓர் கோல நீல
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான்
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே.

என்னுடைய தோழிகளே, நல்ல நெற்றியை உடைய பெண்களே,

என் நெஞ்சம் இப்போது என்னிடம் இல்லை, ‘இனி உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லிவிட்டு எம்பெருமானிடம் சென்றுவிட்டது,

எம்பெருமான் தன்னுடைய இரு கைகளில் சக்ராயுதத்தையும் சங்கையும் ஏந்தியிருக்கிறான், அதைப் பார்க்கும்போது, பல நீண்ட, சூழ்ந்த சுடர்களையுடைய சூரியனையும், பால் போன்ற சந்திரனையும் ஏந்திக்கொண்டு ஓர் அழகிய, நீல நிறமான, நல்ல, நெடிய குன்று நடந்துவருவதுபோல் இருக்கிறது. இன்று மலர்ந்த மலரைப்போன்ற அப்பெருமானின் திருவடிகளை என் நெஞ்சம் சேர்ந்துவிட்டது.

இனி நான் என்ன செய்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com