எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

திருச்சக்கரத்தையும் திருச்சங்கையும்
எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

கொடிஆர் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்ததுதான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.

எம்பெருமானே, கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய திருக்கோளூர் என்ற திருத்தலத்திலும், திருப்புளிங்குடி என்ற திருத்தலத்திலும், மாறாமல் இனிமையாக நீ திருத்துயில் கொண்டு மகிழ்கிறாயே, இந்தக் களைப்பு எதனால்? பல அவதாரங்களை எடுத்து அடியவர்களின் துன்பங்களை நீக்கிய களைப்பா? அல்லது, திரிவிக்கிரமனாக நீண்டு இந்த உலகத்தை அளந்த களைப்பா? சொல்லியருள்வாய்.

பாடல் - 6

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணிஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர் காண்மின்,
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணிஆர் மேனியொடு என் மனம் சூழ வருவாரே.

வேறு யாரையும் பணியாத அமரர்கள் எம்பெருமானிடம் பணிவார்கள், அவர்களுடைய பணிவு போன்ற குணங்களுக்குப் பொருளாக இருப்பவர் எம்பெருமான், அழகிய திருச்சக்கரத்தையும் திருச்சங்கையும் ஏந்தி வருபவர், அவரைக் காணுங்கள், தீராத, கொடிய பிறவி நோயைத் தீர்க்கிற அவர், நீலமணி போன்ற நிறம்கொண்ட திருமேனியோடு என் மனத்தைக் கவரும்படி இவ்வுலகில் வருவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com