எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

திருமாலே, நான்முகனான
எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

திருமால்! நான்முகன், செஞ்சடையான் என்ற இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா, ஊழிப்பிரான், என்னை ஆளுடை
கருமாமேனியன் என்பன் என் காதல் கலக்கவே.

திருமாலே, நான்முகனான பிரம்மா, சிவந்த சடையைக்கொண்ட சிவன் என்னும் இவர்கள் இருவரும் எம்பெருமானாகிய உன்னுடைய தன்மையை அறிவார்களா? (அறியமாட்டார்கள்.) இதைப்பற்றிப் பேசி என்ன பயன்? (ஏதுமில்லை.)  எம்பெருமானே, உன்மீது அன்பு பெருகுவதால், ‘தனித்துவமான, சிறந்த முதல்வனே, ஊழிப்பிரானே, என்னை ஆளுகின்ற கருத்த, சிறந்த திருமேனியனே’ என்றெல்லாம் நான் சொல்வேன்.

பாடல் - 10

கலக்கம் இல்லா நல் தவமுனிவர், கரைகண்டோர்,
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்,
மலக்கம் எய்த மாகடல்தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என்செய்வது, உரையீரே.

கலக்கமில்லாத நல்ல தவ முனிவர்கள், பிறவிக்கடலின் கரையைக் கண்ட முக்தர்கள், குறைதலில்லாத வானோர்கள் என எல்லாரும் எம்பெருமானைத் தொழுவார்கள், பெரிய கடலே கலங்கும்படி அதனைக் கடைந்த அந்தப் பெருமானின் தன்மைகளை நாம் முழுமையாகப் புகழ்ந்து சொல்லிவிடமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com