எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

இமையவர் தந்தை
எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

வார்கடா அருவி யானை மாமலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர்கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல்
போர்கடா அரசர் புறக்கிட மாடம்
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே.

மதநீர் அருவிபோல் கொட்ட, மலைபோல நின்றது குவலயாபீடம் என்கிற யானை, அந்த யானையின் மலை முகடுகளைப்போன்ற இரண்டு தந்தங்களையும் முறித்து வீழ்த்தினான் எம்பெருமான், அந்த யானையைச் செலுத்தும் பாகனைக் கொன்றான், கம்சனின் அவையிலிருந்த மல்லர்களைக் கொன்றான், சுற்றியிருந்த பரண்மேல் நின்ற, போரில் வல்ல அரசர்கள் முதுகு காட்டி ஓடும்படி விரட்டினான், மாடத்தின்மேல் இருந்த கம்சனைக் கொன்று தகர்த்தான், அத்தகைய சிறப்புடைய இளைய ஆயன், திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறான், அதுவே நாங்கள் சென்று சேரக்கூடிய புகலிடம்.

பாடல் 2

எங்கள் செல் சார்வு, யாம் உடை அமுதம்,
இமையவர் அப்பன், என் அப்பன்,
பொங்கு மூ உலகும் படைத்து, அளித்து, அழிக்கும்
பொருந்து மூ உருவன், எம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே?

நாங்கள் சென்று சேரக்கூடிய புகலிடம், எங்கள் அமுதம், இமையவர் தந்தை, எங்கள் தந்தை, பொங்குகின்ற மூன்று உலகங்களையும் படைத்து, காத்து, அழிக்கிற செயல்களை நிகழ்த்துகிற (அவற்றுக்குப் பொருத்தமான) மூன்று உருக்களாகத்(பிரமன், திருமால், சிவன்) திகழ்கிறவன், அதேசமயம் அருவமாகவும் திகழ்கிறவன், சிறந்த கயல்மீன்கள் விளையாடுகிற, தேனையுடைய நீர்நிலங்களால் சூழப்பட்ட திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றில் அமர்ந்துள்ள அந்த ஆதிப்பிரானைத்தவிர, நமக்கு வேறு யார் துணை? (யாருமில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com