எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

உலகங்களும் நிறையும்படி
எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

என் அமர் பெருமான், இமையவர் பெருமான்,
இருநிலம் இடந்த எம் பெருமான்,
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை ஆள்கின்ற எம்பெருமான்,
தென் திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம்பெருமான் அடி அலால் சரணம்
நினைப்பிலும் பிறிது இல்லை எமக்கே.

எனக்கு உரிய பெருமான், இமையவர்களின் பெருமான், வராக அவதாரமாக வந்து, பெரிய நிலத்தை இடந்து எடுத்த எங்கள் பெருமான், முந்தைய வல்வினைகள் எல்லாம் முழுவதுமாகத் தீரும்படி என்னை ஆள்கின்ற எம்பெருமான், தென் திசைக்கு அழகாகத் திகழ்கிற திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றின் மேற்குப்பகுதியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் எம்பெருமான், அவருடைய திருவடிகளைத்தவிர வேறு புகலிடம் எனக்கில்லை, சிந்தனையால்கூட நான் பிற எதையும் எண்ணுவதில்லை.


பாடல் 4

பிறிது இல்லை எனக்குப் பெரிய மூ உலகும்
நிறைப் பேர் உருவாய் நிமிர்ந்த
குறிய மாண், எம்மான், குரைகடல் கடைந்த
கோல மாணிக்கம், என் அம்மான்,
செறி குலை வாழை, கமுகு, தெங்கு அணிசூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம்பெருமான்
அடி இணை அல்லது ஓர் அரணே.

குறுகிய வாமனத் தோற்றத்தில் வந்து, மூன்று உலகங்களும் நிறையும்படி பெரிய உருவமாக நிமிர்ந்த பெருமான், எம் தலைவன், சத்தமிடும் கடலைக் கடைந்த அழகிய மாணிக்கம், என் அம்மான், செறிந்த குலைகளையுடைய வாழை, பாக்கு, தென்னை மரங்கள் அழகாகச் சூழ்ந்திருக்கிற திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே, எல்லாரும் அறிந்து வணங்கும்படி மெய்யாக நின்ற எம்பெருமான், அவருடைய திருவடிகளைத்தவிர வேறு பாதுகாவல் எனக்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com