எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

என்னுடைய ஆருயிர்
எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை
அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது,
ஆதலால் அவன் உறைகின்ற
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும்புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே.


திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றில் எழுந்தருளியிருக்கும் பெருமானே எம்பெருமான், மற்ற இடங்களில் எழுந்தருளியிருக்கும் பாதுகாவலனும் அவனேதான், வேறு யாரும் இல்லை, இது தெரிந்தபோதும், என்னுடைய உயிர் அந்தத் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப் பெருமானைத்தவிர வேறு யாரையும் தழுவாது, ஆகவே, அப்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருச்செங்கூர்த் திருச்சிற்றாற்றுத் திருத்தலத்தையே நான் எப்போதும் எண்ணுகிறேன், அங்கே, நல்ல நான்கு வேதங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் வேள்விகளை நிகழ்த்துகிறார்கள், அந்த வேள்விகளில் உண்டான மணம் மிகுந்த புகையானது மேலே சென்று வானத்தின் ஒளியை மறைக்கிறது. அப்படிப்பட்ட நல்ல, நீண்ட மாடங்களைக்கொண்ட திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறுதான் எனக்கு நல்ல புகலிடம்.


பாடல் - 6

எனக்கு நல் அரணை, எனது ஆர் உயிரை,
இமையவர் தந்தை, தாய்தன்னைத்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானைத்
தடம் கடல் பள்ளி அம்மானை,
மனக்கொள் சீர் மூ ஆயிரவர், வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே.

எம்பெருமான் எனக்கு நல்ல பாதுகாவலன், என்னுடைய ஆருயிர், விண்ணோர்களின் தந்தை, தாய், தன்னாலும் தன்னுடைய தன்மைகளை அறிந்துகொள்ள இயலாத அளவுக்கு அரியவன், பெரிய பாற்கடலிலே திருத்துயில் கொள்கின்ற அம்மான், அத்தகைய எம்பெருமானை மனத்தில் கொண்டவர்கள், சிறந்த மூவாயிரம் அந்தணர்கள், வலிமையான சிவன், பிரமன், திருமால் ஆகியோருக்கு இணையானவர்கள் வாழ்கிற திருத்தலம், செறிந்த, திண்மையான மாடங்களைக்கொண்ட திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றில் நான் எம்பெருமானைக் கண்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com