எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8

சிவந்த திருவடிகளும்
எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8


பாடல் - 7

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக்கண்ணும், செவ்வாயும்,
செவ்வடியும், செய்ய கையும்,
திருச் செய்ய கமல உந்தியும், செய்ய
கமல மார்பும், செய்ய உடையும்,
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ என் சிந்தை உளானே.

திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே நான் கண்ட பெருமான் என்றும் என்னுடைய சிந்தையில் நிறைந்திருக்கிறான். அவனுடைய சிறந்த, சிவந்த, தாமரை போன்ற கண்களும், சிவந்த திருவாயும், சிவந்த திருவடிகளும், சிவந்த திருக்கைகளும், சிறந்த, சிவந்த, தாமரை போன்ற கொப்பூழும், சிவந்த, தாமரை போன்ற மார்பும், சிவந்த உடையும், சிறந்த, சிவந்த திருமுடியும், திருமாலையும், ஆயுதங்களும் என் நெஞ்சில் திகழ்கின்றன.

பாடல் 8

திகழ என் சிந்தையுள் இருந்தானைச்
செழுநிலத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரையானைப்
புகர்கொள் வானவர்கள் புகலிடம்தன்னை
அசுரர், வன்கையர் வெம்கூற்றைப்
புகழும் ஆறு அறியேன், பொருந்து மூ உலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே.

என்னுடைய சிந்தனையிலே இருந்து திகழ்கிற பெருமானை, வளமான உலகத்தில் வாழும் தேவர்களான நான்கு மறைகளில் சிறந்த அந்தணர்கள் திசைதோறும் கை கூப்பிப் போற்றுகிற திருத்தலம், திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு.

அங்கே எழுந்தருளியிருக்கிற எம்பெருமான், ஒளியுடைய வானவர்களின் புகலிடம், வலிமையைக்கொண்ட அசுரர்களுக்குக் கொடிய எமன்போன்றவன், பொருந்துகின்ற மூன்று உலகங்களையும் படைத்து, காத்து, அழிப்பவன், அவனைப் புகழ்வது எப்படியோ, எனக்குத் தெரியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com