எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 

எம்பெருமானே, மாயக்கூத்தனே
எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 

பாடல் - 1

மாயக்கூத்தா, வாமனா, 
வினையேன் கண்ணா, கண், கை, கால்
தூய செய்ய மலர்களாச் 
சோதிச் செவ்வாய் முகிழ்அதாச்
சாயல் சாமத் திருமேனி 
தண் பாசு அடையாத் தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே, 
ஒருநாள் காண வாராயே.

எம்பெருமானே, மாயக்கூத்தனே, வாமனனே, வினைபுரிந்தவனான என்னுடைய கண்ணா, உன்னுடைய திருக்கண்கள், திருக்கைகள், திருக்கால்கள் யாவும் தூய, சிவந்த தாமரை மலர்கள், சோதி பொருந்திய சிவந்த வாய், தாமரை அரும்பு, நீல வண்ணத் திருமேனி, குளிர்ந்த, பசுமையான தாமரை இலை, இவ்வாறு ஒரு நீண்ட, வாசனை வீசும் தாமரைத் தடாகத்தைப்போல் வருகின்ற பெருமானே, நான் காணும்படி ஒருநாள் வருவாய்.

பாடல் - 2

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல்நாட்டு அலமந்தால்
இரங்கி ஒருநாள் நீ, அந்தோ,
காண வாராய், கருநாயிறு
உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலைபோல் சுடர்ச்சோதி
முடிசேர் சென்னி அம்மானே.

புதிய, நல்ல மாணிக்க மலையொன்றில் கருத்த சூரியனொன்று உதிப்பதுபோன்ற ஒளி பரவுகின்ற மயிர்முடியைக்கொண்ட திருமுடியைக்கொண்ட அம்மானே, நான் காணும்படி நீ வரவில்லையே என்று கண்ணீர் விட்டுப் புலம்புகிறேன், அழுது அழுது, புலம்பிப் புலம்பி என்னுடைய கண்ணிலும் வாயிலும் நீர்ப்பசையே தீர்ந்துவிட்டது, இப்படி இந்த நல்ல நாட்டிலே நான் உன்னை எண்ணித் தளர்ந்து வாடினால் என்றைக்கேனும் உனக்கு என்மீது இரக்கம் பிறக்காதா, என்னைக் காண வரமாட்டாயா, அடடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com