எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பவளத் திருவாய்
எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4


பாடல் - 3

முடிசேர் சென்னி அம்மா, நின்
மொய் பூந்தாமம் தண்துழாய்
கடிசேர் கண்ணிப் பெருமானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால்தோளும்
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்
தூநீர் முகில்போல் தோன்றாயே.

‘திருமுடி சேர்ந்த திருத்தலையைக்கொண்ட அம்மா, உனக்கு ஏற்ற, நெருக்கித் தொடுக்கப்பட்ட, அழகிய, ஒழுங்கான, குளிர்ச்சியான, நறுமணம் நிறைந்த துழாய் மாலையை அணிந்த பெருமானே’ என்றெல்லாம் நான் ஏங்கி அழுகிறேன், திருமேனியிலே சேர்ந்த மகரக் குழைகள், பவளத் திருவாய், நான்கு திருத்தோள்கள், துடியைப்போன்ற திரு இடை ஆகியவற்றுடன், தூய்மையான நீரையுடைய மேகத்தைப்போல் என்முன்னே தோன்றுவாய்.

பாடல் - 4

தூநீர் முகில்போல் தோன்றும் நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர்க் கமலக் கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண் கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வோனே,
எந்தாய், சொல்லமாட்டேனே.

எம்பெருமானே, எங்கள் தந்தையே, தூய்மையான நீரைக்கொண்ட மேகத்தைப்போல் தோன்றுகின்ற ஒளிமிகுந்த திருவடிவம் கொண்டவனே, உன்னுடைய கனி போன்ற திருவாயும், தேன் சொரியும் தாமரை போன்ற திருக்கண்களும் வந்து என்னுடைய நெஞ்சில் நிறைந்துவிட்டனவே, நீரிலே அழுந்திய பெரிய வெள்ளி மலையின்மேலே வள்ளண்மை கொண்ட, கருத்த நீல மேகம் படிந்திருப்பதைப்போல, தூய நீரைக்கொண்ட பாற்கடலின்மேலே திருப்பள்ளிகொள்பவனே, உன்னுடைய சிறப்பைச் சொற்களாலே விவரிக்கமுடியவில்லையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com