எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

திருச்சக்கரத்தை ஆயுதமாகக்
எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
படையாய், ஏறும் இரும்சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதும்கொல்,
இம் மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுஆர் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே.

‘எம்பெருமானே, உனக்கும் பக்தர்களாகிய எங்களுக்கும் எத்தகைய பொருத்தமோ! மின்னும் திருச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனே, ஏறி ஊர்கிற பெரிய சிறகுகளையுடைய கருடனையே கொடியாக உயர்த்தியவனே’ என்றெல்லாம் நான் ஏங்கி ஏங்கி அழுகிறேன், இந்தப் பெரிய உலகத்தின் பாரத்தைத் தீர்ப்பதற்காகத் தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையிலே பிறந்த அந்த மாயன், எனக்கு என்ன செய்ய எண்ணியிருக்கிறானோ.

பாடல் - 10

பிறந்த மாயா, பாரதம்
பொருத மாயா, நீ இன்னே
சிறந்த கால், தீ, நீர், வான், மண்
பிறவும் ஆய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா,
உன்னை எங்கே காண்கேனோ?

பக்தர்களுக்காக இங்கே வந்து பிறந்த மாயனே, பாரதப்போரில் சண்டையிட்ட மாயனே, நீ இவ்வாறு எளியவனாக இருந்தும்கூட, சிறந்த காற்று, நெருப்பு, நீர், வான், மண், இன்னபிறவாகவும் ஆகிநிற்கிறாய், பெருமானே, கறந்த பாலுக்குள் நெய்யைப்போல இவை அனைத்துக்குள்ளும் யாராலும் காண இயலாதபடி நின்ற
பெரிய மாயனே, உன்னை நான் எங்கே காண்பேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com