ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

எம்பெருமான், திருமகளை
ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்,
நும்திறத்து ஏதும் இடை இல்லை, குழறேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டி, இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திருமார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்.

(காதலி சொல்கிறாள்) நடுவில் நின்று திரிகிற என்னுடைய பூவைகளே, உங்கள் வேலைக்கு இங்கே இடமில்லை, கூவாதீர்கள், இந்திர ஞாலங்களைக் காட்டி இந்த ஏழு உலகங்களையும் கவர்ந்துகொண்ட எம்பெருமான், திருமகளை மார்பிலே கொண்ட நம் தலைவன் நம்முடைய உயிரை உண்ணவேண்டும் என்று நன்றாக எண்ணிவிட்டான்.

பாடல் - 6

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீ மிழற்றேல், ஆர் உயிர்க் காகுத்தன்,
நின் செய்யவாய் ஒக்கும் வாயன், கண்ணன், கை, காலினன்
நின் பசுஞ் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்.

(காதலி சொல்கிறாள்) நன்றாக எண்ணிப்பார்த்து நான் வளர்த்த சிறு கிளிப்பிள்ளையே, நீ இனிய குரலில் கூவாதே, எனக்கு அரிய உயிர்போன்ற காகுத்தன், எம்பெருமான், உன்னுடைய சிவந்த வாயைப்போல் திருவாயைக்கொண்டவன், கண், கை, கால்களும் அதேபோல் சிவந்த தன்மையைக்கொண்டவன், உன்னுடைய பசுமையான நிறத்தைப்போல சாம நிறத்தைக்கொண்டவன், அவன் என்னோடு கலந்தான், பின்னர் என்னைவிட்டுச் சென்றுவிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com