சுமையா

சுமையா - கனவுப் பிரியன்; பக்.216; ரூ.160; நூல் வனம், எம்.22, 6 ஆவது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-89.

சுமையா - கனவுப் பிரியன்; பக்.216; ரூ.160; நூல் வனம், எம்.22, 6 ஆவது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-89.
21 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கதையின் பேசு பொருளும் வித்தியாசமானதாக இருக்கிறது. பெரும்பாலான கதைகளின் நிகழ்வுகள் யதார்த்த வாழ்க்கையைச் சார்ந்ததாக இல்லாமல், கற்பனையில் நடப்பவையாக உள்ளன. நாம் இருக்குமிடத்தில் இருந்து தொலைதூரத்துக்கு நம்மை இட்டுச் செல்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைச் சண்டையில் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியிலிருந்து சென்னைக்கு வந்த ஆயிஷா, வயதான காலத்தில் அங்கே திரும்பிச் செல்கிறார் "சுமையா' கதையில்.
குருசடைத் தீவு பகுதியில் சுற்றுச்சூழலை நாசம் செய்கிறார் முதலாளி ஒருவர். எதிர்ப்பவர்களைக் கொன்றுவிடுகிறார். தேங்காய் நண்டு சமையலில் பாதரசக் கலவையைக் கலந்து கொடுத்து முதலாளியைச் சாகடிக்கிறார் கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவர், "ஆவுளியா' சிறுகதையில்.
அசாம் தேயிலைக் காடுகளில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன என விளம்பரம் செய்து வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்ந்திழுத்து, போதைப் பொருட்களை அவர்களிடம் விற்பனை செய்கிறவர்கள், அதைக் கண்டுபிடித்த இருவரைக் கொலை செய்கின்றனர், "தற்கொலைப் பறவைகள்' சிறுகதையில்.
இவ்வாறு இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் கற்பனை உலகில் பறக்கின்றன. கூடவே சமூகப் பிரச்னைகளையும் பேசுகின்றன.
இக்கதைகள் மண்ணில் கால் பதித்து நடந்திருந்தால், இவை பேசும் சமூகப் பிரச்னைகள், சமூக மாற்றத்துக்கான தூண்டுதல்களை அளித்திருக்கக் கூடும். சுவையான வாசிப்பனுபவம் தரும் கதைகளாக மட்டுமே இவை எஞ்சி நிற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com