சுவடிகளின் சுவடுகள்

சுவடிகளின் சுவடுகள் - வே.கட்டளை கைலாசம்; பக்.104; ரூ.100; மேலும் வெளியீட்டகம், 9, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை- 627002.

சுவடிகளின் சுவடுகள் - வே.கட்டளை கைலாசம்; பக்.104; ரூ.100; மேலும் வெளியீட்டகம், 9, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை- 627002.
மனிதன் தனது எண்ணங்களையும் கருத்துகளையும் பதிவு செய்வதற்குப் பயன்படுத்திய சுவடிகளைப் பற்றிய விரிவான பதிவு இந்நூல். பல்வேறு சுவடிகளைப் பற்றிய அறிமுகத்துடன் நூல் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதும் முறை 20 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்துவிட்டாலும், பல பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து கி.பி.1812 ஆம் ஆண்டில் "திருக்குறள் மூலபாடம், நாலடியார் மூல பாடம்' ஆகிய இருநூல்கள் திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட பல நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இதற்காக அரும்பாடுபட்ட மழவை மகாலிங்கையர், வீரபத்திரையர், உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை உட்பட பல தமிழறிஞர்களின் அருஞ்செயல்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலக்கியம், மருத்துவம், ஜாதகம், கலை, கணிதம், நிகண்டு, நாட்டார் வழக்காறுகள் என பலவகைச் செய்திகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் திருநெல்வேலியிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மிகுதியாக இருந்ததையும், கதைப்பாடல் ஓலைச் சுவடிகள், கும்மிப் பாடல் ஓலைச் சுவடிகள், விடுகதைப் பாடல் ஓலைச்சுவடிகள் என பலவிதமான ஓலைச் சுவடிகளைப் பற்றியும் இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
இன்றைய புத்தகங்களின் முன்னோடிகளான ஓலைச்சுவடிகளின் வரலாற்றையும், அவற்றில் அடங்கியுள்ள பல தகவல்களையும் எடுத்துரைக்கும் இந்நூல், தமிழிலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் நிச்சயம் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com