யாதும் ஊரே - 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்

யாதும் ஊரே - 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்

யாதும் ஊரே - 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; பக்.800; ரூ.1000; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர்; தொடர்புக்கு: ப. முத்துகுமாரசுவாமி )98402 45279.
தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் தமிழின் வளர்ச்சி வரை ஆராயப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் ஒவ்வொன்றும் பெருமை சேர்ப்பவை. 'தமிழருக்கு' என்ற முதல் பிரிவில், மகாகவி பாரதியாரின் 'தமிழருக்கு', வ.உ.சிதம்பரனாரின் 'நமது தேசத்தில்', பாரதிதாசனின் தமிழின் வெற்றி எங்கிருக்கிறது?, கவிஞர் முடியரசனின் 'ஒற்றுமை வேண்டும்' ஆகிய கட்டுரைகளை வெளியிட்டு, முன்னோர் மொழியைப் பொன்னே போல போற்றி மலரின் நறுமணத்தைக் கூட்டியுள்ளனர்.
மொழி வளர்ச்சி குறித்து, ப.ஜீவானந்தம், டாக்டர் மு.வ., அ.சிதம்பரச் செட்டியார், கலாநிதி க.கைலாசபதி, தமிழண்ணல், கி.நாச்சிமுத்து முதலியோரின் கட்டுரைகள் தமிழ் மொழியின் சிறப்பையும் வளர்ச்சியையும், ஆராய்ச்சிப் போக்கையும் தெளிவாக விளக்கியுள்ளன. தமிழ் இலக்கணத்தின் சிறப்புகள் எளிமையாக ஆராயப்பட்டுள்ளன. நம் தமிழக வரலாறு குறித்த பல்வேறு வரலாற்றுச் சுவடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைத் தமிழரின் பொறியியல் புலமை தொடங்கி கணினித் தமிழின் வளர்ச்சி வரை ஆராயப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் படைத்துள்ள படைப்புகள் அனைத்தும் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. தமிழ் அன்னையின் முகப்பு ஓவியத்துடனும், அற்புதமான பல ஓவியங்களுடனும், கலை நுட்பத்தோடு கூடிய பக்க வடிவமைப்புடனும் வெளிவந்திருக்கும் இம்மலர், தமிழ் இலக்கிய உலகில் வாடா மலராக மணம் வீசும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com