வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள்! : நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! வெளியீடு; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர், சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.

விஞ்ஞான வளர்ச்சிக்காக இணையத்தின் பயனை, 
விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன்!

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர் தொடங்கியவன்;
பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியனவன் நான்!

இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை;
எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு!

இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை;
இதயத்திலும் பதிந்தால் பெற்றது உலகுப் புகழ்!

இப்படி, இணையத்தில் வாழும் எம் தமிழ்! என்ற கவிதையில், பொதுவாக இணையத்தில் தமிழனின் அறிவியலால் தமிழின் புகழையும், பெரும் வளர்ச்சியையும் வியந்து சுட்டியவர், அப்படியே இவரைப் பற்றி இவரே, தன்னிலை விளக்கமாக, கவிதையிலேயே தன்னை அடையாளப் படுத்தியுள்ளதிற்கிணங்க, கணிப்பொறி, இணையதளம், வலைத்தளம், மின்னஞ்சல் களம், சமூகவலைத் தளம் போன்றவற்றைக் கண்டறிந்த அறிவியலறிஞர்கள் கவிஞர் இரா. இரவிக்காகவே ஆண்டறிந்தார்களோ? என்ற என்னுடைய வினாவுக்கு விளக்கமாக, இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர், இரா. மோகன் அவர்கள்," இரவிக்குக் கடன் இணையத்தில் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே!" என்று அணிந்துரையின் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ள கூற்றுப்படி, இணையத்தில் தமிழ்மொழி வழியாகக் கவிதைகள், கட்டுரைகள், நூல்நயம் போன்றவைகளையும், 

இப்படைப்புகளின் வழியாகத் தமிழையும், அன்றாடம் அல்லும் பகலுமாக உலகின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு செல்கின்ற அரும்பணியை ஒரு தவமுனிவர் போன்று செய்து வருகிறவர் என்றால், பாராட்ட வார்த்தைகளில் அடங்காது. மிகைப்படுத்தி கூறியதாகவும் ஆகாது.

இத்துணைச் சிறப்புக்குரிய கவிஞர் இரா. இரவி அவர்கள், தொல்காப்பியர்ம, தொல்காப்பியத்தை ஒன்பான் பொருள்களில் பகுத்து எடுப்பது போலவும், ஒன்பான் விலையுயர்ந்த மணிகள் போலவும், என் நூல்களைப் போலவும் உறவுகளின் மாண்பு; தமிழ், தமிழன், தமிழ்நாடு; சமூகப் பதிவுகள்; இயற்கைச் சித்தரிப்பு; தன்னம்பிக்கை முனை; காதல் உலகு; நாட்டு நடப்பு; சான்றோர் அலைவரிசை; உதிரிப் பூக்கள் என்று ஒன்பான் பகுதிகளாக வரையறுத்து இந்நூலை வடிவமைத்துள்ளார். இந்த ஒன்பான் பகுதிகளால் ஒன்பான் சுவையாக்கி மாந்த சமுதாய மேம்பாட்டுக்காக எதிர்பார்ப்போடு படையலிட்டதற்கு முதலில் நூலாசிரியருக்கு பாராட்டும் நன்றியும் உரியது.

இந்நூல், நூலாசிரியரின் பதினாறாவது நூலாக வெளிவந்துள்ளது; ஆனால், வானதி பதிப்பகத்தில் கவிஞர் இரா. இரவியின் ஐந்தாவது நூலாக வெளியாகியுள்ளது. இந்நூலிலுள்ள கவிதைகள் தினமணியின் கவிதைமணி இணையத்தில் வெளிவந்தவை என்றும், மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் கவியரங்குகளுக்கு வழங்கிய தலைப்புகளுக்கு வரைந்த கவி ஓவியங்கள் என்றும், நூலாசிரியரின் முன்னுரையான என்னுரையில் பகர்ந்துள்ள இவர், ஏனோ பெங்களுரில் வாசித்தக் கவிதைகளைச் சுட்டிக்காட்ட மறந்துள்ளார்.

கவிஞர் இரா. இரவி தமிழ் நாட்டரசு சுற்றுலாத் துறையின் உதவி அலுவலராக பணியாற்றுபவர், பணியில் மாற்றலாகி மதுரையிலிருந்து பெங்களுருக்கு வந்தவர், நான் ஏற்கனவே பொறுப்பாளராக செயல்பட்ட, பெங்களுர்த் தமிழ்ச் சங்கம் நடத்தும் ஏரிக்கரைக் கவியரங்கிலும், இப்பொழுது பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகின்ற தூரவாணி நகர் ஐ.டி.ஐ தமிழ் மன்றம் நடத்தும் பாவாணர் பாட்டரங்கிலும் வாசித்தக் கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் சொல்லிருந்தால் பெங்களூரிலும் கவிதைப் பணியாற்றிய வரலாற்றும் பதிவாகி பெயருக்கு மெருகேறி இருக்கும் என்பது என்னுடைய கணிப்பாகும்.

அய்க்குக் கவிஞரான இவர், முதன்முதலாக புதிய முயற்சியில் ஈடுபட்டு, எனக்கும் புதுக்கவிதை எழுத வரும் என்று இந்நூலை எழுதியுள்ளார். ஆனால் புதுக்கவிதைக்கான அடையாளமே அறிய முடியாத அளவில், வாமனன் அளந்த ஈரடியைப் போன்றும், வாயின் இரு உதடுகளைப் போன்றும், திருக்குறளின் ஈரடிகளைப் போன்றும், ஈரிரு அடிகளாகவே அனைத்து கவிதைகளையும் நெய்துள்ளார்.

மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இல்லாமல் ஒரு புதிய வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். திரைஇசைப் பாடல்களை எல்லா கவிஞர்களும் எதுகை, மோனை, சந்தம் வைத்து எழுதியப் பாடல்களிலிருந்து வேறுபட்டு, புதுக்கவிதைகளால் சந்தங்கள் திரைஇசைப் பாடல்களின் நுழைத்த பெருமை எப்படி கவிப் பேரரசுவைரமுத்துக்குப் போய் சேருமோ, அப்படி சந்தங்களுடனும், மோனைகளுடனும், சில அடிகளில் எதுகை-களுடனும் புதிய கோணத்தில் செந்துறையாக எழுதியுள்ளதை நாம் தமிழுக்கு வந்த புதுவரவாக ஏற்றுக் கொண்டாடுவோம்.

பெரும்பான்மையான கவிஞர்கள் எவ்வாறு காதலைப் பாடாதார் கவிஞரில்லையோ? அதேபோல, தாயைப் பற்றி பாடாதாரும் கவிஞரல்ல! என்ற அடிப்படையில் தாயைப்ப ற்றி அதுவும் நூலில் முதன்மைக் கவிதையாக எல்லோரையும் போலவே தாய்க்கு இவரும் முதலிடத்தை ஒதுக்கியுள்ளார்.

உலகமே வெறுத்து ஒதுக்கினாலும்-அவள் ஒருபோதும் வெறுப்பதில்லை பெற்றவனை!

உன்னத உறவு என்ற கவிதையில் இப்படி பதிவு செய்து உறவுகளிலேயெ தாயைப் போன்று உன்னத உறவு வேறு இல்லை என்றவர், இதற்கு சான்றாக மேலேயுள்ள இரு அடிகளை விளக்குகிறார். அதாவது, கருத்து வேறுபாட்டில் கணவனையோ மற்ற உறவுகளையோ வெறுத்து ஒதுக்கினாலும், தன் மகனைத் தீயவனென்று உலகமே வெறுத்து ஒதுக்கினாலும், ஒரு தாயாய்த் தன் மகனை வெறுக்காத கருணை தெய்வமாய் இருப்பான் என்ற யதார்த்தத்தைப் படைத்துள்ளார்.

தெய்வத்தை விட மேலான தெய்வம் அன்னை தான் என்பதை அனுபவமொழியே மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆம், அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்; என்று, ஆனால், தாய் மகனைக் கொல்வாள் என்று எவரும் இதுவரை இயம்பியதுமில்லை; நிகழ்ந்த்துமில்லை. இதை ஆணித்தரமாக வலிமையான சொற்கூட்டால் அருமையாக அடையாளப்படுத்தியுள்ளார்.

உன்னத உறவு தாய்தான் என்று உணரவைத்தவர், 
நெறிப்படுத்தி, நல்வழி காட்டுபவர் தந்தை! 
நன்மை தீமை எடுத்து இயம்புபவர் தந்தை!

என்று நூலின் இரண்டாம் கவிதையிலேயே ஒப்பற்ற உறவு தந்தையென உணர வைத்துள்ளார். மேலே நான் சுட்டியுள்ள கவிதை அடிகளுக்கிணங்க, பிள்ளைகளை நெறிப்படுத்தி, நல்வழி காட்டக்கூடிய தந்தை பொருளீட்ட ஓடிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளோ, நன்மை, தீமைகளை அறிய முடியாமல் தீயவர்களாய் அழிந்து கொண்டிருக்-கிறார்கள். கவிஞர், இரா. இரவியின் கவிதைக்கேற்ப செயல்படவேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

தொண்டென்ற பெயரில் உலகிலுள்ள அத்துணைத் தொண்டு-களிலும் தன்நலமே நிறைந்திருக்கும். ஆனால், ஒரு தந்தையாக நின்று ஆற்றுகின்ற தொண்டில் இம்மியளவும் தன்னலமின்றி ஈகையே நிறைந்திருக்கும்; தொண்டுகளில் தலையாயத் தொண்டாக சிறந்து விளங்குவது தந்தையின் தொண்டே என்பதையும், ஓய்வின்றி, உணவு, உடை, உறக்கம், களிப்பின்றி குடும்பத்திற்காக உழைத்துழைத்து ஓடாகும் ஒரே பிறவி தந்தை என்பதையும்,

உழைத்து உழைத்து ஓடான போதும்-அவர்
ஒருபோதும் சலித்துக் கொள்வ தில்லை!

என்று இப்படி கண்முன்னே தந்தையைக் காட்சியாக்கி நம்மை காண வைத்துள்ள பாங்கு மிக அழகு. இன்றைய நிகழ்காலம் பெண்களுக்கான காலமென்றே பகரலாம். அந்தளவிற்கு கல்வியறிவில், ஆற்றும் பணிகளில் மேலோங்கி சிறந்து விளங்குவதோடு மட்டுமல்ல, திருமணமாகி புகுந்த வீட்டில் வாழ்ந்தபோதும் கணவனுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பெற்றோரைப் பேணி தாங்கும் தூண்களாக விளங்கும் பண்பு, பாசமிக்கவர்களாக விளங்குகின்றனர். பெற்றோரை ஆண் பிள்ளைகள் போல் பெண் பிள்ளைகள் புறக்கணிப்பதில்லை. இதை நான், கண்டு, கேட்டு, அனுபவப் பூர்வமாக உணர்ந்த உணர்வை,

உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள்;
மணம் முடிந்தபின்னும் மறக்காதவள்!

என்று, இல்ல இளவரசி எனும் கவிதையில் கவிஞர் அழுத்தமாக உணர்த்தியுள்ளார்.

தொலைந்து போன கடிதம் என்ற கவிதை தன்னில்;

இழந்த உயிர்கள் கணக்கில் அடங்காது;
இன்னும் மீனவர் வாழ்க்கை விடியவில்லை!
தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர்;
தட்டிக் கேட்க நாதியே இல்லை! 

முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்;
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்!
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்....

இவை யாவும் தொலைந்துபோன கடிதங்களென்று நாட்டை ஆள்பவர்கள் மக்கள் மீது பற்றற்றவர்களாக பொறுப்பின்றி கணிப்பொறி காலத்திலும் கடிதம் எழுதிக் கொண்டு அத்துடன் கடமை முடிந்ததாக நிலைமையை புரிந்து கொள்ளாத உயிரின் மதிப்பை உணராதவர்-களைப் பார்த்து எள்ளி நகையாடி நையாண்டி செய்தவர்,

தூக்கு தண்டனைக் குரிய குற்றவாளியை
குறைந்த பட்சம் கைதுகூடச் செய்யவில்லையே!

என்று ஈழத் தமிழினத்தை அழித்துக் கொடூரன் அரசபக்சே இன்னும் கைதுகூடச் செய்யவில்லையே! என ஆதங்கத்தோடு இலங்கை, இந்தியா, ஐ.நா. வைப் பார்த்து மட்டும் கேட்கவில்லை. உலகத்தை நோக்கி கேட்கிறார். என்றே நான் எண்ணுகிறேன்.

ஆனால், ‘அவசரப்பா அகவற்பா’ என்பதற்கேற்ப, உடனடியாக எளிதாக, எழுதக்கூடிய ‘பா’ வகைதான் அகவற்பா. சிறிது முயன்றிருந்தால் இந்த அகவலாகவே எழுதி இருக்கலாம். ஆம், இரண்டடிக்கு ஒரு மோனையென எழுதியவர், இரண்டடிக்கு ஒரு எதுகையும், அடிதோறும் ஈரசைச் சீர்களாக, அடிதோறும் நான்கு சீர்களாக்கி எழுதி இருந்தால் அருமையான மூன்று நயத்துடன் ஆசிரிய விருத்தமாக மிளிர்ந்திருக்கும். இனியாவது முயற்சிக்க வேண்டுமென்பது, என் விழைவு.

இவர், மேலும் பல நூல்கள் எழுதி மேன்மேலும் பேரும், புகழும் விதைகளும் பரிசுகளும் பெற்று உயர்வதோடு சமுதாயத்தையும், உயர்த்திட பாராட்டி வாழ்த்துகிறேன்.

- நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com