திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்) - மறைமலையடிகள்

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்) - மறைமலையடிகள்

 பக்.432; ரூ.280; வெளியீடு: சிவாலயம், சென்னை-4; 044-2498 7945.
திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். 
மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது பதிப்பு.
திருவாசகம் போன்ற ஞான நூல்களுக்கு உரை எழுதுவோர் தாம் தகுதியும், திறமையும் பெற்றிருக்கிறோமா என்பதை முதலில் தம்மைத்தாமே பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பர் சான்றோர். அந்த வகையில் மறைமலையடிகளார் இவ்விரண்டிலும் தம் ஆற்றலைத் தாமே நன்குணர்ந்தவர் என்பதற்கு இவ்வுரையே மிகச்சிறந்த சான்று. புராண நிகழ்ச்சிகளை உபநிடதங்கள், வேதங்கள், தலபுராணங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 
பரஞ்சோதியாருக்கு முன்னவரான பெரும்பற்றப்புலியூர் நம்பியையே மேற்கோள் காட்டுகிறார். சில இடங்களில் இருவரையும் ஒதுக்கி திருவாசகத்தையே மேற்கோளாக்கியிருக்கிறார். பிறர் உரையை மறுத்துரைக்கும் போது, திவாகரம், பிங்கலந்தை, தொல்காப்பியம், உரையாசிரியர், தேவாரம், பெரியபுராணம் முதலியவற்றின் துணை கொண்டு தம் பக்கம் உள்ள நியாயமான சான்றுகளைக் காட்டியிருப்பது சிறப்பு. 
திருவண்டப்பகுதியில் 13 முதல் 28 வரையிலான வரிகளுக்கு சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள அடிகளாரின் உரை விளக்கமே அவரின் உரைத்திறனுக்குக் கட்டியம் கூறுகிறது. ஓர் ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மறைமலையடிகளாரின் இவ்வுரை நூலே இலக்கணம் வகுத்துள்ளது. அற்புதமான, அரிய பதிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com