ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம் - பெ.சு. மணி; பக்.144 ; ரூ. 50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம் - பெ.சு. மணி; பக்.144 ; ரூ. 50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
அரசியல்வாதியாக மட்டுமல்லாது இலக்கியவாதி, ஆன்மிகவாதி, இதழாசிரியர், சிறை சென்ற தியாகி, சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர் ம.பொ.சி என்று அறியப்படும் ம.பொ.சிவஞானம்.
இவர் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை இரண்டாம் வகுப்போடு நிறுத்தியவர். 
பலவிதமான வேலைகளை மாறி மாறிப் பார்த்து வந்தாலும், பின்னர் அச்சுக் கோக்கும் தொழிலில் நிரந்தரமாக ஈடுபட்டார். அச்சுக்கு வரும் நூல்களையெல்லாம் கற்பதன் மூலம் அச்சுக்கூடத்தைக் கல்விக்கூடமாக மாற்றிக் கொண்டவர்.
அச்சுத் தொழிலாளியாயிருந்தபோது மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநில அளவில் பொறுப்புகளில் இருந்தார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகினார்.
"தமிழரசுக் கழகம்' என்னும் அமைப்பைத் தொடங்கினார். தமிழ்நாடு எனும் பெயர் மாற்றம், மாநில சுயாட்சி, எல்லைகளைக் காத்தல் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தார். இப்படித் தனது வாழ்நாள் முழுவதும் நாடு, மொழி, பண்பாடுகளைக் காக்கும் ஒரு போராளியாகவே வாழ்ந்திருக்கிறார் ம.பொ.சி. 
ம.பொ.சி. விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டது, தமிழரசுக் கழகத் தலைவராக ஆற்றிய பணிகள், இதழியல் துறையில் முத்திரை பதித்தது, இலக்கிய நூல்களைப் படைத்தது போன்ற எல்லாப் பணிகளும் துறைவாரியாகப் பிரித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
எந்தக் கருத்தைக் கூறுவதாயினும் அதுகுறித்த ஐயம் சிறிதுமின்றி அறுதியிட்டுக் கூறுவது ம.பொ.சி.யின் பாணி என்பதை இந்நூலைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. 
ம.பொ.சி. போன்ற பன்முகத் தன்மையுள்ள ஓர் ஆளுமையை ஒரு சிறிய நூலின் மூலம் அறிமுகம் செய்வதென்பது எளிதான காரியமன்று. இந்நூலாசிரியர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பதாலும், ம.பொ.சி. குறித்து ஏற்கெனவே மூன்று நூல்கள் எழுதியுள்ளவர் என்பதாலும் அது சாத்தியமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com