கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை - ரவிக்குமார்; பக்.104; ரூ.120; மணற்கேணி பதிப்பகம்
கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை - ரவிக்குமார்; பக்.104; ரூ.120; மணற்கேணி பதிப்பகம், 79, மருத்துவக்கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் -613004.
காவிரி பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளும், போராட்டங்களும் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் அப்பிரச்னை பற்றி மிகவும் உயிரோட்டமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத்தால் 2007 இல் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி., தண்ணீரில் இருந்து 14.75 டி.எம்.சி., தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஒதுக்கி, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உத்தரவிட்டது. 
தமிழகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், கர்நாடகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறும் நூலாசிரியர், நிலத்தடி நீர் தொடர்பான புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார். 
அடுத்து பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக 4.75 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டின் பங்கிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு எடுத்து வழங்கியிருக்கிறது. "பெங்களூருவின் உலகத்தரம் குறித்து கவலைப்பட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக காவிரி தண்ணீர் இருப்பதையோ, அந்தத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையோ கவனத்தில் கொள்ளவேயில்லை' என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நியாயமின்மையை நூல் எடுத்துக் கூறுகிறது. 
உலக அளவில் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஃபின்லாந்தின் ஹெல்ஸின்கி நகரில் 1966 இல் உருவாக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதற்கு முரணாக உள்ளது என்று கூறும் நூலாசிரியர், காவிரி நிதி நீர்ப் பிரச்னைக்கான இன்றைய அடிப்படையான காரணமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். "டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால் அது பாலைவனமாகிவிடும்... நெல் வயல்களையெல்லாம் எண்ணெய் வயல்களாக்கிவிட்டால், காவிரி தண்ணீருக்காகப் போராடும் தேவை எழாதில்லையா? என மத்தியில் ஆள்பவர்கள் கணக்குப் போடுகிறார்கள்' எனக் கூறும் நூலாசிரியர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல், காரைக்கால் ஆகிய பகுதிகளில் வெறும் 500 பேருக்குத்தான் வேலை வாய்ப்பு ஏற்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். 
மிகவும் சிக்கலான பிரச்னையைப் பற்றி மிக எளிமையாக, தெளிவாக எல்லாரும் புரிந்து கொள்ளும்விதத்தில் நூல் எழுதப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com