ராமாநுஜர்

ராமாநுஜர் - இந்திரா பார்த்தசாரதி;  பக்.176; ரூ.160; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044 - 2436 4243.
ராமாநுஜர்

ராமாநுஜர் - இந்திரா பார்த்தசாரதி;  பக்.176; ரூ.160; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044 - 2436 4243.
ராமாநுஜரின் வாழ்க்கை, சிந்தனை, ஆற்றிய அரும் பணிகள் ஆகியவற்றை எளிமையான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லும்வகையில் நாடக வடிவத்தில் இந்நூல்  எழுதப்பட்டிருக்கிறது.  நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை போன்று, "தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்குச் சம காலத்தவராய்  இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்நாடகத்தின்  நோக்கமாக'  இருக்கிறது. 
"ராமாநுஜர் ஜாதி வேறுபாட்டை ஒழிக்கும் வகையில், வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்று அறிவித்தார்.  சமூக விளிம்பிலிருந்த பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி அவர்களைத் "திருக்குலத்தார்'   என்றழைத்தார்' என்று முன்னுரையில் குறிப்பிடும் நூலாசிரியர்,  அதற்காக ராமாநுஜர் வீட்டிலும், வெளியிலும் சந்தித்த பிரச்னைகளை உயிரோட்டமான  காட்சிகளாக வடிவமைத்துச் சித்திரித்திருக்கிறார். 
வீட்டில்  அவருடைய மனைவி தஞ்சம்மாவே அவருடைய கருத்துகளுக்கு முரணாகச் செயல்படுகிறார்.  ஊரில் இருப்பவர்களும் அவருடைய ஜாதி மறுப்புக் கண்ணோட்டத்தை எதிர்க்கிறார்கள். உயர்ந்த ஜாதி, இழிந்த ஜாதி என்று பேசுகின்றனர். "யார் இழிந்தவன் ஸ்வாமி? வேதம் வகுத்த வியாஸர் செம்படவர்தானே? இராமகதை சொன்னவர் வேடர்தானே?'  என்று அவர்களிடம் கேட்கிறார் ராமாநுஜர்.  
ஜாதிரீதியான பல்வேறு  நம்பிக்கைகளை, சடங்குகளை, பழக்க வழக்கங்களை எதிர்க்கிறார்.  ராமாநுஜரே நம்முடன் வாழ்வதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட இந்நாடகத்தின் காட்சிகள்,  நாடகத்தை  வாசிப்பதைப் போல அல்ல,  பார்ப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.
ராமாநுஜரின் சிந்தனைகளை விளக்கும் வகையில் எழுதப்பட்ட இந்நாடகம்,   மனிதாபிமானத்தைத் தவிர வேறு சிறந்த சமயம் எதுவுமில்லை என்ற அடுத்த கட்ட   உயர்ந்த சிந்தனையை வாசகர்களிடம் ஏற்படுத்தும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com