குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் வாலீஸ்வரர் கோவில், குரங்கணில்முட்டம்

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.


     இறைவன் பெயர்: வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்

     இறைவி பெயர்: இறையார் வளையம்மை
    

எப்படிப் போவது

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பயணம் செய்யும்போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால், கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.



அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

ஆலய முகவரி
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,
குரங்கணில்முட்டம் கிராமம்,
தூசி அஞ்சல்,
செய்யாறு வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் – 631 703.

இக்கோயில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு : கே.எஸ் மணிகன்டன் சிவம், கைபேசி – 9894699095

தல வரலாறு

ஒருமுறை, வினைப்பயன் காரணமாக வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருமாறினர். தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவனும், இத்தலம் சென்று தன்னை வழிபட்டு சாபவிமோசனம் பெற அருளினார். வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால், இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது.

வெளிப் பிராகாரத்தில் இருந்து உள் மண்டபம் நுழையும் வாயிலில், சுவரில் இறைவனை வழிபடும் நிலையில் புடைப்புச் சிற்பமாக ஒரு பக்கத்தில் குரங்கு வழிபடுவதும், இன்னொரு பக்கத்தில் அணிலும் காக்கையும் வழிபடுவதும் அமைந்துள்ளன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பிறகு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய லிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது.



அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு). இது எமன் சிவபூஜை செய்வதற்காக, காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.

எமதர்மனால் உண்டாக்கப்பட்ட காக்கை மடு தீர்த்தம் கொடிய நோய்கள், அர்ப்ப ஆயுளில் குழந்தை மரணம், கருச்சிதைவு ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் சிறப்புடையதாகும். சிறு வயதிலேயே முதுமைத் தோற்றம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் இத்தலம் வந்து இறையார் வளையம்மை சந்நிதியில் விளக்கேற்றி அம்பிகையை வழிபட்டால், அந்தத் தோஷம் நீங்கும். அதேபோன்று, குழந்தைகளின் ஜாதகத்தில் பாலாரிஷ்டம் என்ற தோஷம் இருந்தால், காக்கை மடு தீர்த்தத்தில் நீராடி, இத்தல இறைவன் வாலீஸ்வரரை வழிபட்டால் அந்தத் தோஷம் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு

மதில்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால், நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அம்பிகை என்றும் இளமையுடன் வளையல் அணிந்து காட்சி அளிப்பதால், இறையார் வளையம்மை என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இறைவியின் பெயரை சம்பந்தர் தனது பதிகத்தின் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார் சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

இக்கோவிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும் தனது கடைசிப் பாடலில், இறைவன் மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு (முக்தி பேறு அடைதல்) எளிதாகும் என்றும் குறிப்பிடுகிறார்.

1. விழுநீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளைம்மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழும் நீர்மையர் தீதுஉறு துன்பம் இலரே.

2. விடைசேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாடக்
கடைசேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே.

3. சூலப்படையான் விடையான் சுடு நீற்றான்
காலன் தனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

4. வாடாவிரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல பாலனம் நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

5. இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கிக்
கறையார் மிடற்றான் கரி கீறிய கையான்
குறையார் மதிசூடி குரங்கணின் முட்டத்து
உறைவான் எமை ஆளுடை ஒண் சுடரானே.

6. பலவும் பயனுள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

7. மாடு ஆர் மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்கக்
கூடார் மதில் எய்து குரங்கணின் முட்டத்து
ஆடு ஆர் அரவம் அரையார்த்து அமர்வானே.

8. மை அர் நிற மேனி அரக்கர்தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டலர் அரிதே.

9. வெறியார் மலர்த்தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணின் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

10. கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்
வழுவார் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்
குழு மின்சடை அண்ணல் குரங்கணின் முட்டத்து
எழில் வெண்பிறையான் அடி சேர்வது இயல்பே.

11. கல்லார் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல்லார் தமிழ் மாலை செவிக்கு இனிதாக
வல்லார்க்கு எளிதாம் பிறவா வகை வீடே.

ஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர்கள்: சிதம்பரம் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com