திக்குவாய் குறையை நீக்கும் தலம் சிவானந்தேஸ்வரர் கோவில், திருப்பேணுப்பெருந்துறை

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 64-வது தலம் திருப்பேணுப்பெருந்துறை.

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 64-வது தலம் திருப்பேணுப்பெருந்துறை.

   
      இறைவன் பெயர்:
சிவானந்தேஸ்வரர்
      இறைவி பெயர்: மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது

எப்படிப் போவது

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் இப்போது திருப்பந்தறை என்று அழைக்கப்படுகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பந்துறை,
நாச்சியார்கோவில் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 602.

இக் கோயில், தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு
 


பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்துவிட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக்கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்துவிட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க, தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி முருகனுக்கு மகாவிஷ்ணு அறிவுரை கூறினார்.

அதன்படி முருகப் பெருமான், திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாக சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காவிரியின் கிளை நதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடிகொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது.

உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகக் பெருமான், சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க, அதுவரை மெளனமாக இருந்த முருகப் பெருமான் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

ஊமையாக இருந்த முருகப் பெருமானே இங்கு பேசும் பாக்கியம் பெற்றதால், பேச்சு சரியாக வராத குழந்தைகளைப் பெற்றோர்கள் இங்கு அழைத்து வந்து தரிசிப்பதை இன்றும் பார்க்கலாம். எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனைப் பேசவைத்த தலமாகவும் திகழ்ந்து, பேசும் சக்தியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையைத் தீக்கும் தலமாகவும், வாக்குவன்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது.

இத்திருத்தலத்தில், முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய சிறிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. எதிரில் மங்கள தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் கோவிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதிகள் உள்ளன. குக விநாயகர், சாட்சி விநாயகர் என்று பெயர்கள். முருகன் இத்தலத்துக்குத் தவமிருக்க வந்தபோது, விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்குப் பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம். அவர்களை வழிபட்டு ஆலயத்தினுள் சென்று இறைவனை வணங்கலாம்.

மூன்று நிலை ராஜகோபுரம் வழியே உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே பிராகாரம் உள்ளது. கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன. இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர்.

சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சின் முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணி, பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய திருமேனி.

ஆலயத்தில் உள்ள பிட்சாடனர் உருவச்சிலையும் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு அமுது படையல் திருவிழா நடக்கிறது. அம்பாள் மங்களாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவ்வாலயத்தின் தலமரம் வன்னி. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.

செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் கரிகால் சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்று இத்தல கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்தின் விசேஷ மூர்த்தியான தண்டபாணி சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தொடர்ந்து 45 நாட்கள் பருகி வர, பேச்சுக் குறைபாடுகள் நீங்கும். நல்ல வாக்குவன்மையும், படிப்பில் கவனமிகுதியும் ஏற்படும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமையன்று இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, கணபதி, சுவாமி - அம்பாள் மற்றும் கந்தனை வழிபட்டால், தோல் வியாதிகள் யாவும் நீங்கப்பெறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை பன்றிவெண் கொம்பு
                                                                                 ஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லிச் செய்தொழில்
                                                              பேணியோர் செல்வர்
அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி அரிவை ஓர் பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல்கணம் நின்று பணியச்
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றும்
                                                                                                     எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.
செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல்
                                                                                                     சேர்த்திக்
கொய் பூங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை
                                                                                                   வேடர்
கைபோல் நான்ற கனிகுலை வாழை காய்குலையில் கமுகு
                                                                                                            ஈனப்
பெய் பூம்பாளை பாய்ந்து இழிதேறல் பில்கு பெருந்துறையாரே.
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர்
                                                                                         வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர்
                                                                                                             ஆகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.
 
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை
                                                                                             செய்யத்
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு 
                                                                                          அரியார்
அணியார் நீலமாகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த வித்தகர் வேத
                                                                                           முதல்வர்
பண்ணார் பாடல் ஆடலறாத பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல் பேணு 
                                                                                  பெருந்துறையாரே.
விழையார் உள்ளம் நன்கெழு நாவில் வினைகெட
                                                                              வேதம் ஆறு  அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும்
                                                                                                பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை அன்னம் கூடு
                                                                             பெருந்துறையாரே.
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி
                                                                                            இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுரண் ஆகமுந்
                                                                                             தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை
                                                                                                  மூர்த்தி
அன்னங் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.
புள்வாய் போழ்ந்து மாநிலம் கீண்ட பொருகடல் வண்ணனும்
                                                                                                              பூவின்
உள்வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை
                                                                                                           கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின் முகம் மலரக் கயல்
                                                                                                       பாயக்
கள்வாய் நீலம் கண்மலல் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ்பொழிற் சோலை மல்கு
                                                                                              பெருந்துறையாரே.
கடையார் மாடம் நன்கு எழு வீதிக் கழுமலவூரன் கலந்து
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே.

பாடியது - இரா. குமரகுரு, ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com